இடைச் சொல் வகை இடைச் சொற்கள் எழுவகைப்படும். 1. சாரியை இடைச்சொற்கள். இவை இருமொழிப்புணர்ச்சியில் தாம் சார்ந்த சொல்லின் பொருளை உணர்த்த உதவுவன. உ-ம்: எல்லாம்+ஐ= எல்லாவற்றையும். இதில் வற்றுச்சாரியையானது எல்லாம் என்பதை அஃறிணைப் பொருளாகக் காட்டியுதவியது. எல்லாம்+ஐ=எல்லா நம்மையும். இதில் நம் சாரியையானது எல்லாம் என்பதைத் தன்மைப் பன்மையாக, உயர்திணைப் பொருளாகக் காட்டியுதவியது. 2. வினைச் சொற்களைப் பிரித்துச் சேர்க்கும் போது காலம் காட்டும் இடை நிலைகளும் பால் காட்டும் விகுதிகளும் இடைச் சொற்களாம். உ-ம்:வந்தான் என்பதில் த் இறந்த கால இடைநிலை; ஆன் ஆண்பாலுணர்த்தும் விகுதி. 3. வேற்றுமையுருபுகள் யாவும் இடைச் சொற்கள். உருபுகளாவன ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்பனவும் அவை சாரும் பிறவும். 4. அசைநிலையாக வருவன. அதாவது பெயரொடு அல்லது வினையொடு சார்த்திவருவன. தமக்கெனப் பொருளுடையனவல்ல. உ-ம்: உரைத்திசினோர். உரைத்தோர் என்பதில் இசின் சார்ந்தது. 5. இசைநிறைக்கவருவன. உ-ம் : ஏஎ இவன் ஒருத்தன். 6. குறிப்பாற் பொருள் உணர்த்துவன. உ-ம்: “சிறியகள் பெறினே எமக்கீயுமன்னே” (புறம் 235). “கொஞ்சம் கள் கிடைத்தால் தான் உண்ணாமல் எனக்குக் கொடுத்து விடுவான்” என்பது இதன் பொருள். இதில் மன் என்பதற்குத் தனிப் பொருள் இல்லை. ஆனால் இவ்விடத்தில் ‘அத்தகைய வாய்ப்புக் கழிந்து விட்டது’ என்னும் பொருளை நாம் குறிப்பால் உணருமாறு அமைந்துளது. 7. உவம உருபுகளாக வரும் போல, அன்ன முதலியன. உ-ம் : புலி போலும் பாய்ச்சல், புலியன்ன மறவன். (2). (மேற் கூறப்பட்ட ஏழனுள் சாரியைகள் எழுத்ததிகாரப் புணரியலிலும், இடைநிலை விகுதிகள் வினையியலிலும், வேற்றுமையுருபுகள் வேற்றுமையியலிலும், உவமவுருபுகள் பொருளதிகார வுவம வியலிலும் கூறப்பட்டன. ஆதலின் இவ்வியலில் அசைநிலை இசைநிறை குறிப்பு ஆகிய மூன்றுமே கூறப்படும். அவற்றுள்ளும் மிகுதியாகக் கையாளப்படுதலும் பொருளுணர்த்துதற் சிறப்பும் உடைய காரணத்தால் குறிப்புப் பொருளுணர்த்தும் இடைச் சொல் பற்றி முதலில் கூறப்படும்). |