சொல்லதிகாரம் - இடையியல்44

மன் மன்னை என நின்றது.

உ-ம் : சிறிய கட் பெறினே எமக்கீயும் மன்னே’ (புறம் 235) என்புழி
மன்   கழிந்தது   என்னும்   பொருள்பட  நின்றது.  ‘புதுமல   ரணிய
இன்றுவரின்  அதுமன்  எம்  பரிசல்  ஆவியர்   கோவே’  (புறம் 147)
இதனுள் மன் என்பது ஆம் என்பது குறித்து நின்றது.   1 ‘கூரிய தோர்
வாள்  மன்’  என்ற  வழித்  திட்பமின்று என்றானும்,  ‘வெட்டவல்லார்
உளராயின்’  என்றானும்  ஒழிந்த  சொல்லினான்  உணரும்   பொருள்
பட்டது.

நச்.

இது  தத்தம்   குறிப்பிற்  பொருள்   செய்வனவற்றுள்    ஒன்றன்
பொருட்பாகுபாடு கூறுகின்றது.

இ-ள் ; மன்னைச் சொல் கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று
அம்மூன்று  என்ப  -  மன்னைச்  சொல்  கழிவுப்    பொருண்மையும்
ஆக்கப்     பொருண்மையும்       எச்சமாய்     ஒழிந்து     நின்ற
சொற்பொருண்மையும்     என்று     சொல்லப்பட்ட      அம்மூன்று
கூற்றையுடையது என்று கூறுவர் ஆசிரியர், எ-று.

உ-ம் ; ‘சிறிய கட் பெறினே எமக்கீயு மன்னே’ (புறம் 235) புதுமலர்
கஞல  இன்று பெயரின் அதுமன் எம்பரிசில் ஆவியர்  கோவே’  (புறம்
147) ‘கூரியதார் வாள்மன், திட்பமின்று என வரும்.

சுல்.

என்-எனின், இது  தத்தம்  குறிப்பிற்  பொருள்   செய்குந  வற்றுள்
ஒன்றன் பொருட் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் :  கழிவுப்  பொருண்மைக்கண்  வரும்  மன்னும்,   ஆக்கப்
பொருண்மைக்கண்  வரும்  மன்னும்,  ஒழியிசைப்   பொருண்மைக்கண்
வரும்   மன்னும்   என  மூன்று   கூற்றதாம்  என்ப   மன்னென்னும்
சொல்லது பொருட்பாகுபாட்டு வேற்றுமை எ-று.

இவ்வாறு  பொருளுணர்த்தலும்  அவ்விடைச்  சொற்  காவ  தோர்
இலக்கணம் என்பது. அவ்வுதாரணம் உரையிற் கொள்ளப்படும்.


1. கூரியதோர் வாளாயிருந்தது இனித்திட்பமின்று:   வெட்டவல்லார்
உளராயின்  இது   கூரியதோர்  வாளாகும்  எனத் தனித்தனிப்
பொருள் காண்க.