சொல்லதிகாரம் - இடையியல்48

உ-ம் :  ‘அரிவையைப் பெறுகதில் லம்ம யானே’  (குறுந். 14)  இது
விழைவு பற்றி வந்தது.

1 பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கரி தாகுக தில்ல எமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பிற
வெள்ளிதழ் கவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயுமோ ரற்றே.          (புறம். 246)

இதனுள்  ஈமம்  புகுதல்  நுமக்கு  அரிதாகுக:   எமக்கு  இக்காலத்துப்
பொய்கையொடு ஒக்கும் என்றமையாற் காலம் குறித்தது.

“வருகதில் லம்மவெஞ் சேரி சேர” (அகம்.  276)   வந்தா லிவ்வாறு
செய்வன் என்னும் ஒழியிசை குறித்து நின்றது.

நச்.

இதுவுமது.

இ-ள் : தில்லைச் சொல்  விழைவே காலம் ஒழியிசைக்கிளவி என்று
அம்மூன்று   என்ப-  தில்லைச்சொல்   விருப்பமும்  காலமும் ஒழிந்து
நின்ற    பொருண்மையும்   என்று   சொல்லப்பட்ட   அம்   மூன்று
கூற்றையுடையதென்று கூறுவர் ஆசிரியர், எ-று.

உ-ம் :“வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப்
பெருகதில் லம்ம யானே”                   (குறுந். 14)

எனப் பெறுதற்கண் உளதாகிய விருப்பம் கூறிற்று.

2“வருகதில் வல்லே வருகதில் வல்லென
வேந்துவிடு விழுத்தூ தாங்காங் கிசைப்ப
நூலரி மாலை சூடிக் காலிற்
றமியன் வந்த”                               (புறம். 184)

இது காலம் குறித்தது.


1. பொருள் :     சுடுகாட்டின்கண்    அமைக்கப்பட்ட   பெரிய
கட்டைகளால் ஆன பிணப்படுக்கை உங்களுக்கு   அரியவாகுக:
எங்களுக்கு எம்முடைய   பெரிய  தோளையுடைய    கணவன்
இறந்தானாக அரும்பு இல்லாதபடி  வளமான  இதழ்   மலர்ந்த
தாமரை    யையுடைய     நீர்மிக்க    பெரிய   பொய்கையும்
இப் பிணத்தீயும் ஒரு தன்மையவே. 

2. பொருள்: அரசனால்  சொல்லிவிடப்பட்ட    சிறந்த  தூதுவர்
விரைவாக    வருக:   விரைவாக  வருக  என   ஆங்காங்கே
ஒலியெழுப்ப,    நூலரி    மாலையைச்   சூடிக்கொண்டு தான்
ஒருவனே காலினாலேயே நடந்து வந்த”