சொல்லதிகாரம் - இடையியல்55

சேனா.

இ-ள் ; எச்சங்குறிப்பது முதலாக ஆக்கம் குறிப்பது ஈறாக உம்மைச்
சொல் எட்டாம் எ-று.

உ-ம் ;  ‘சாத்தனும்  வந்தான்’   என்னும்   உம்மை,   கொற்றனும்
வந்தான்  என்னும்  எச்சம் குறித்து நிற்றலின் எச்சவும்மை.  கொற்றனும்
வந்தான்  என்பதூஉம்   இறந்த  சாத்தன்  வர  வாகிய  எச்சங்குறித்து
நிற்றலின் எச்சவும்மை.

(குறவரும்மருளும்     குன்றத்துப்படினே’  (மலை படு 275) என்பது
குன்றத்து மயங்கா தியங்குதற்கண் குறவர் சிறந்தமையாற் சிறப்பும்மை)

”ஒன்றிரப்பான் போல் இளிவந்துஞ் சொல்லும் உலகம்
புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன்
வல்லாரை வழிபட் டொன் றறிந்தான் போல்
நல்லார்கட் டோன்று மடக்கமும் உடையன்
இல்லோர் புன்கண் ஈகையிற் றணிக்க
வல்லான் போல்வதோர் வண்மையும் உடையன்”
                                       (கலி. 47)

என்புழி  இன்னான்  என்று துணியாமைக்கண் வருதலின் ஐயவும்மை.

‘சாத்தன்  வருதற்கும்  உரியன்’  என்பது  வாராமைக்கும்  உரியன்
என்னும்       எதிர்மறையை      ஒழிபாகவுடைத்தாய்     நிற்றலின்
எதிர்மறையும்மை.

‘தமிழ்நாட்டு     மூவேந்தரும்     வந்தார்’    என     எஞ்சாப்
பொருட்டாகலான் முற்றும்மை.

‘நிலனும்  நீரும்  தீயும்  வளியும்  ஆகாயமும்  எனப்பூதம்  ஐந்து’
என்புழி எண்ணுதற்கண் வருதலின் எண்ணும்மை.


1. பொருள் ;   “என்னிடத்து     ஒரு    காரியத்தை   இரந்து
நிற்பான்போலத்தன்னைப்   பிறரால்   இகழப்பட்டு   எளியராந்
தன்மை     தோன்றவும்    சில  மொழி   கூறும்;  அங்ஙனம்
குறையிரந்து  நிற்பினும்  உலகத்தை  யெல்லாம்  பாதுகாப்பான்
போலே இருப்பதொரு  வலியும்  உடையன்;  மெய்ப்  பொருள்
கூறும்  நூல்களைக்  கூற  வல்லவர்களை  வழி  பட்டு  நின்று
அப்பொருளை      அறிந்தான்    போலே     நன்மக்களைக்
காண்டொறும்  மன  அடக்கமுடையன்; வறியோர்  வருமையைக்
கொடை யினாலே  போக்க  வல்லான்  போலே  இருப்பதொரு
வலியும் உடையன்” - நச்சினார்க்கினியர்.