1 “ஐதேய்ந்தன்று பிறையும் அன்று, மைதீர்ந்தன்று மதியுமன்று, வேய மன்றன்று மலையுமன்று, பூவமன்றன்று சுனையுமன்று” (கலி. 55) என்பதும் அது. நெடியனும் வலியனுமாயினான் என்பது ஆக்கம். “ செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே” (கிளவி 15) என்பது இலக்கணம் ஆக்கிக் கோடல் குறித்தமையின் ஆக்கமுமாம். கல் என் - எனின் இதுவுமது. இ-ள் : எச்சத்தின் கண்ணுதும் சிறப்பின் கண்ணதும் ஐயத்தின் கண்ணதும் எதிர்மறைக்கண்ணதும் முற்றின் கண்ணதும் எண்ணிண் கண்ணதும் தெரிநிலைக் கண்ணதும் ஆக்கத்தின் கண்ணதும் என அக்கூறு எட்டாம் உம் என்னுஞ்சொல், எ-று. எச்சம் இறந்தது தழீஇயதும் எதிரது தழீஇயதும் என இரு வகைத்து. அவையாவன: யான் கருவூர்க்குச் செல்வேன்’ என்றாற்கு ‘யானும் அவ்வூர்க்குப் போதுவல்’ என்பதும், அவ்வாறு கூறினார்க்கு ‘யானும் உறையூர்க்குப் போதுவல்’, என்பதூஉம் என இவை. இனிச்சிறப்பு : உயர்வுச் சிறப்பும் இழிவு சிறப்பும் என இரு வகைத்து. உயர்வு, ‘தேவர்க்கும் வேம்பு கைக்கும்’ என்பது. ‘ஊருக்கும் அணித்தே பொய்கை’ என்பதும் அது இழிபு அவ்வூர்ப் பூசையும் புலால் தின்னாது என வரும். ஐயம் : பத்தும் எட்டும் உள என்பது. எதிர்மறை : ‘கொற்றன் வருதற்கும் உரியன்’ என்பது, இவ்வெதிர்மறை ‘அஃறிணை விரவுப் பெயர் இயல்புமாருளவே” (தொல். எழு. தொகை.) எனப்பண்பு பற்றியும் வரும். எச்சத்தோடு இதனிடை வேற்றுமை என்னையெனின், அது பிறிதோர் பொருளினைத் தழுவும்; இஃது அப்பொருட்டானும் ஒரு கூற்றைத் தழுவும் என்பது.
1. பொருள் : நுதல் வியப்பை யுடைத்தாய்த் தேய்ந்தது, ஆயினும் பிறையும் அன்று, முகம் மறுவற்றது, ஆயினும் மதியும் அன்று; தோள் வேயின்தன்மை நெருங்கிற்று, அது பிறக்கும் இடம் அன்று; கண் பூவின் தன்மை நெருங்கிற்று, அது பிறக்கும் இடமன்று. |