‘சாத்தன் உண்டானோ’ என்பது வினா ஓகாரம். ‘யானோ கொள்வேன்’ என்பது ‘கொள்ளேன்’ என்னும் எதிர்மறை குறித்து நிற்றலின் எதிர்மறை ஓகாரம். ‘கொளலோ கொண்டான்’ என்பது ‘கொண்டுய்யப்போயி னானல்லன் முதலாய ஒழியிசை நோக்கி நிற்றலின் ஒழியிசை யோகாரம். ‘திருமகளோ வல்லள் அரமகளோ வல்லள் இவள் யார்? என்ற வழித் தெரிதற்கண் வருதலின் தெரிநிலை ஓகாரம். ‘ஓஒ பெரியன்’ என்பது பெருமை மிகுதி யுணர்த்தலிற் சிறப்போகாரம். தெய். இதுவுமது. இ-ள் : பிரிநிலை முதலாகஓதப்பட்ட ஆறிடமும் என்று சொல்லுவர். ஓகாரமாகிய இடைச்சொல் பொருள் உணர்த்தும் இடம், எ-று. உ-ம் : பிரிநிலையாவது பிற பொருளினின்றும் பிரித்தமை தோன்ற வருவது. ‘கானங் காரெனக் கூறினும் யானோ தேறேன் அவர் பொய்வழங்கலரே அவரோ ‘வாரார்’ (குறுந். 29) என வரும். எல்லாரும் தேறினும் யான்தேறேன், எல்லாரும் வரினும் அவர் வாரார் எனப் பிரிநிலைப் பொருண்மை தோன்றியவாறு கண்டு கொள்க. வினா என்பது வினாவுதற் பொருள்மேல் வரும். அதுவோ? உண்டாயோ? எனவரும். எதிர்மறையாவது தன்னாற் சொல்லப்பட்ட பொருளின் மாறுபட்டு வந்தது. உண்ணேனோ வாரேனோ என்றவழி உண்பல், வருவல் என்னும் பொருள்பட்டது. ஒழியிசையாவது தன்னாற் சொல்லப்பட்ட பொருளன்றி, மற்றொரு பொருளுங் கொள்ள நிற்பது, ‘செய்கையோ செய்தான்’ என்ற வழிப் பின்பும் இவ்வாறு செய்திலன் என்னும் பொருளுங் குறித்து நின்றவாறு கண்டு கொள்க. தெரிநிலை என்பது ஒரு பொருளை ஆராயும் நிலைமை கண் வருவது. ‘திருமகளோ அல்லள், நாமகளோ அல்லள் : இவள் யாராகும்’ எனவரும். |