சொல்லதிகாரம் - இடையியல்69

கண்   அசைநிலையாகி    நிற்பது.   கடல்போற்  றோன்றல  காடிறந்
தோரே’ எனவரும்.

அஃதேல்     எழுத்ததிகாரத்துள்  ‘மாறுகோள் எச்சமும் வினாவும்
எண்ணும்’   (உயிர்ம.   73)  என  ஏகாரவீறு  ஓதினார் :  அவற்றுள்
மாறுகொள்  எச்சம் ஈண்டு ஓதாதது   என்னையெனின், “வன்புற வரூம்
வினாவுடை   வினைச்சொல்,   எதிர்   மறுத்துணர்த்தற்கு  உரிமையும்
உடைத்தே”  (வினை.47) என்றாராகலின் அது வினாவினுள்  அடங்கும்.
அன்றியும் வந்தது கண்டு வாராதது முடித்தல் என்பதனானும்  கொள்க.
“யான்  வைதேனே”  என்ற  வழி  வைதிலேன் என்னும் எதிர் மறைப்
பொருள் பட்டது.

இவை    மூன்று சொல்லும் பெயரொடு ஒட்டுப்பட்டு நின்று தத்தம்
குறிப்பினாற்    பொருள்   உணர்த்தின.  பிறவும்  இவ்வாறு  வருவன
அறிந்து கொள்க.

நச்.

இது     பெரும்பான்மை     பொருள்படுமாறும்     சிறுபான்மை
அசைநிலையாமாறுங் கூறுகின்றன.

இ-ள் : தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே ஈற்றசை இவ்வைந்து
ஏகாரம்மே     -    தெளிவுப்பொருண்மை   வினாப்   பொருண்மை
பிரிநிலைப்பொருண்மை   எண்ணுப்  பொருண்மை ஈற்றசையாதல் என
இவ்வைந்து வகைப்படும் ஏகாரம், எ-று.

உ-ம் : உண்டே எ மறுமை! நீயே உண்டாய்?, அவருள் இவனே
கள்வன்,   ‘நிலனே  நீரே  தீயே  வளியே’,  ‘கடல்போல்  தோன்றல
காடிறந்தோரே’ எனவரும்.

ஈற்றசை      என்றதனைச்      செய்யுள்   ஈற்றின்கண்   அன்றி
‘வாடாவள்ளியங்   காடிறந்தோரே’   (குறுந்.  216)  எனச்  சொல்லின்
ஈற்றிலும்  கொள்க.  யானே   கொண்டேன் என்புழி நீயே கொண்டாய்
என்னும்   எதிர்மறைப்   பொருள்    தருதல்  ‘மாறுகொள்  எச்சமும்
வினாவும்’ (உயிர்ம. 73) என்பதனாற் கொள்க.

கல்.

என்-எனின், இது பெரும்பான்மை  பொருள்படுமாறும் சிறுபான்மை
யசைநிலையாமாறும் உணர்த்துதல் நுதலிற்று.