பெரும்பான்மை. சிறுபான்மை ‘உண்ணவெனத் தின்னவென, என வினையுடனும் வரும். (45) என்று: ‘என’ போல்வதே. மற்று: வினைமாற்று அசைநிலை என்னும் பொருள்களில் வரும். (14) எற்று: இறந்தது என்னும் பொருளில் வரும். உ-ம் ‘எற்று என் எழில்’ ‘எப்படி இருந்தது என் அழகு; இப்போது இல்லை’ என்பது குறித்தது. (15) மற்றையது: சுட்டியதற்கு இனமாக வரும், உ-ம்: ஆடையொன்று காட்டிய போது அது வேண்டா தான் ‘மற்றையது காட்டு’ என்பது, ‘மற்றையது’ என்பதற்கு ‘அது போன்ற பிறிதொன்று ‘என்பது பொருள். (16) மன்ற: தெளிவுப் பொருளது. ‘மடவை மன்ற வாழிய முருகே, என்பதில் அப்பொருள் காண்க. (17) தஞ்சம்: எளிமை என்னும் பொருளில் வரும். (18) அந்தில்: அவ்விடம், அசைநிலை என்னும் பொருள்களில் வரும். (19) கொல்: ஐயப் பொருளில் வரும். (20) எல்: விளக்கம் என்னும் பொருளது. (21) ஆர்: இது பன்மையைக் குறிக்கும் ஓர் இடைச் சொல் இயற்பெயர்ப்பின் - அதாவது ஒருமை குறித்த இயற்பெயர்ப்பின் வருமானால் பெயரின் ஒருமைக்கேற்ப ஒருமை வினையால் முடியாமல் தனக்கேற்ற பன்மை வினையால் முடிவு பெறும். ‘சேந்தன்’ என்பது ஒருமை இயற்பெயர். இது சேந்தன் வந்தான் என முடியும். ‘சேந்தனார்’ என ‘ஆர்’ இடைச்சொல் பெற்றுவரின், ஒருமைப் பொருளாதலின் அதற்கேற்ப ‘வந்தான்’ என ஒருமையால் முடியாது ‘சேந்தனார் வந்தார்’ எனப் பன்மை வினையால் முடியும். நம்பியார் நரியார் என எப்பெயரின் வந்தாலும் ‘வந்தார்’ எனப் பன்மை வினையே கொள்ளும். (22) செய்யுளில் ‘ஆர்’ அசை நிலையாகவும் வரும். ‘தொகையும் உள’ என்பது ‘தொகையுமார் உள’ (சொல்.67) என வரும். (23) குரை: இசைநிறை அசைநிலைப் பொருள்களில் வரும். (24) மா: வியங்கோளசைச் சொல்லாகவரும் உ-ம் : உண்கமா. (25) |