5. முற்று - ‘உன் போக்கு ஊருக்கே பிடிக்கவில்லை’ என்ற வழி ஊரிலுள்ளார் அனைவரும் உன் போக்கை வெறுக்கிறார்கள் என முற்றுப் பொருள் பயத்தலின் முற்றாயிற்று. ‘வீடேபொலிவிழந்தது’ என்றவழி வீடு முற்றும் பொலிவிழந்தது எனப் பொருள்தரின் இதுவும் முற்றாம். 6. புறக்கணிப்பு - ‘அவர் போனால் போகட்டுமே’ என்ற வழி நண்பர் போதல் புறக்கணிக்கப் படுதலின் புறக் கணிப்பாயிற்று. 7. முடிப்பு - ‘குழந்தைக்கு நீங்கள் கொடுக்கத்தானே வேண்டும்’ என்று பிறர் கூறிய வழி ‘நீங்கள் கொடுக்கத் தான் வேண்டும்; இது முடிந்த முடிபு’ என்பது பட நிற்றலின் இது முடிப்பாயிற்று. 8. யாப்புறவு (கண்டிப்பு) - நீங்கள் வந்தாலே வந்தது’ என்ற வழிக் கண்டிப்பாக வர வேண்டும் என்பது பட நிற்றலின் யாப்புறவு. 9. தொடர்ச்சி - தொடர்ந்து வாய் மூடியிருக்கும் ஒருவனை, ‘இவன் பேசாமேலே இருக்கிறான்’ என் புழித் தொடர்ச்சிப் பொருண்மையமைதலின் இது தொடர்ச்சி. 10. 1 கவர்ச்சி - ‘இந்த சிறு பையன் இவ்வளவு படித்திருக்கிறானே’ என்புழித் தன் மனம் சிறுவன் செய்கையால் கவரப்பட்டமை தோன்றலின் இது கவர்ச்சி. 11. விருப்பு - ‘நீங்கள் நாள்தோறும் இரண்டு குறள் படிக்கலாமே’, என்புழி விருப்பம் வெளிப்படுதலின் இது விருப்பாயிற்று. 12. துணிவு - தன் பகைவனைத் தாக்கித் தோற்கடிக்கத் தயாராகி நிற்கும் ஒருவன், ‘அவன் இப்போது இங்கு வரட்டுமே’ என்புழி ஏகாரம் துணிவுப் பொருண்மை பயத்தலால் இது துணிவு. 13. கையறவு - தனக்கெதிரில் ஒருவர் மரணப்படுக்கையில் இருந்து உயிர் நீங்கும் சமயத்தில் இதைக் கண்டு கையற்ற நிலையில் ‘உயிர் போகிறதே’ என்புழிக் கையறவு தோன்ற நிற்றலிற் கையறவு.
1. இது வியப்புக்கும் பொருந்தும். |