14. எதிர்ப்பு - இதைச் செய்வாயா என்று வேண்டிய ஒருவனிடம் ‘முடியேவே முடியாது’ என்று மற்றவன் கூறும் வழி ஏகாரம் எதிர்ப்பு உணர்ச்சி தோன்ற நிற்றலின் இஃது எதிர்ப்பு. 15. ஒப்புதற்குறிப்பு - ‘அவர்தானே இங்கிருக்கிறார். என்றவழிக் கேட்கப்பட்டார் ‘ஆம்’ என்று ஒப்ப வேண்டும் என்ற குறிப்பு இருப்பின் அஃது ஒப்புதற் குறிப்பு. 16. ஒப்புமை நோக்கு - ‘இந்தச் சிறுவன் இவ்வளவு படித்தால் பெரியவர் எவ்வளவு படிக்கலாம்’ என்ற கருத்தோடு ‘இந்த சிறுவனே இவ்வளவு படிக்கிறான்’ என்புழி ஏகாரம் ஒப்புமை நோக்கு, ஐந்து வயதிலே யே இவனுக்கு இவ்வளவு அறிவிருக்கிறது என்பதும் அது. 17. ஒருமை நாட்டம் - ‘குழந்தை விளக்கையே பார்க்கிறது’ என்ற வழி ஏகாரம் ஒருமை நாட்டத்தை நன்கு புலப்படுத்தி நிற்றலின் இங்கு அஃது ஒருமை நாட்டம். 18. கழிந்ததற்கிரங்கல் - அவர் இந்தப் போட்டியில் தோற்றுப்போய் விட்டாரே. அவர்க்குப் பயித்தியம் பிடித்துவிட்டதே, நான் குழந்தையையடித்து விட்டேனே - என இவ்வாறு வருவன கழிந்ததற்கிரங்கற் பொருண்மைய. 19. எய்துவதஞ்சல் - மழையில் நனைந்தால் காய்ச்சல் வருமே, நெருப்பைத் தொட்டால் சுட்டு விடுமே, இரவில் தனியாக விட்டால் குழந்தை பயந்து விடுமே. என்பன போல்வன எய்துவது அஞ்சல். 20. எடுத்து மொழிதல் - தனக்குத் தெரியும் என்பதை எடுத்துச் சொல்ல எண்ணிய ஒருவன் ‘எனக்கு இது தெரியுமே’ என்றவழி அஃது எடுத்து மொழிதல். (இலக்கணவுலகில் புதிய பார்வை-பக் . 110 -113) பால. கருத்து : ஏகார இடைச்சொல்லின் பொருட்குறிப்பு இவை என்கின்றது. பொருள் : ஏ, என்னும் இடைச்சொல் தெளிவும், வினாவும் பிரிநிலையும் எண்ணாதலும் ஈற்றசையும் என ஐந்து பொருட் கூறுபாடாகும். |