பால. கருத்து : என என்னும் இடைச்சொல்லின் பொருட் குறிப்பு இவை என்கின்றது. பொருள் :- என என்னும் இடைச்சொல், வினைப்பொருண்மையும், குறிப்புப் பொருண்மையும், இசைப் பொருண்மையும், பண்புப் பொருண்மையும், எண்ணுதற் பொருண்மையும் பெயர்ப் பொருண்மையும் ஆகிய ஆறும் குறித்த சொற் பொருளைக் கருதி வரும் நிலைமையதாகும். வினை முதலிய அறுவகைப் பொருள்தரும் சொற்களைப் பொருந்த அவற்றையே தன் பொருளாகக் கொண்டு வருமென் பார் “அவ்வறு கிளவியும் கண்ணிய நிலைத்தே” என்றார். எ-டு : 1. மலைவான் கொள்கென உயர்பலி துஉய் எனவும் 2. துண்ணெனத் துடித்தது மனம் எனவும் 3. ஒல்லென ஒலிக்கும் கடல் எனவும் 4. வெள்ளென விளர்த்தது வானம் எனவும் 5. நிலனென நீரெனத் தீயென வளியென வானெனப்பூதம் ஐந்து எனவும் 6. அழுக்காறெனவொரு பாவி எனவும் முறையே வந்தவாறு கண்டு கொள்க. ‘எனல்’ என்பதன் அடியாகப் பிறந்த ‘என’ என்னும் செயவென்னெச்சம் வேறு இவ்இடைச் சொல்வேறு என அறிக. என்று |