முன்னிலையசைச் சொற்கள் : மியா இக மோ மதி இகும் சின் என்பன. (26) இகும், சின் என்பன தன்மை முன்னிலைகளிலும் வரும் (27) அம்ம : இது ஒருவனை ஒன்று கூறுவன் கேட்க என்னும்போது வரும். (28) ஆங்க: உரையசைப் பொருளில் வரும். (29) போலும் : இது உவமையின்றி அசைநிலையில் வருதல் உண்டு. ‘மங்கலம் என்பது ஓர் ஊர்’ என்பது ‘மங்கலம் என்பதோர் ஊர் போலும் என வரும். (30) அசை நிலையிடைச்சொற்கள் சில : யா கா பிற பிறருக்கு அரோ போ மாது. (31) ஆக, ஆகல், என்பது : என்னும் மூன்றும் பேச்சு வழக்கில் ஆக ஆக ஆகல் ஆகல், என்பது என்பது என இரட்டித்து வரும். (32) ஓள : சிறப்பு, மாறுபாடு என்னும் பொருள்களில் வரும்போது ‘ஒளஒள என இரட்டித்து வரும். இரட்டியாது ‘ஒளஉ’ என அளபெடுத்தும், ‘ஒள’ என அளபெடாதும் வரும். இக் காலத்து இது ஓகாரமாக வழங்கப்படும். (33) நன்றே அன்றே அந்தோ அன்னோ : என்பன சொல்லுவான் குறிப்பால்-ஒசை வேறுபாட்டால் பொருள் உணர்த்தும் (34) எனா : இது எண்ணுப் பொருளில் வரும். அதனுடன் ‘உம்’ இடைச்சொல் சேர்ந்தும் தொக்கும் வரும். அவ்வாறே என்றா என்பதும் வரும். ‘பின்சார் அயல்புடை தேவகை யெனாஅ’ (சொல். 82) ‘ஒப்பிற் புகழிற் பழியின் என்றா’ (சொல் 72) எனக் காண்க. இவ்வுதாரணங்களில் எனாவும் என்றாவும் ஒரிடத்திலிருந்து பிறவிடங்களிற் சென்றன. (41) பெயருடன் வருதல் பெரும் பான்மை: சிறுபான்மை ‘உண்ணவெனா தின்னவெனா’ என வினையுடனும் வரும். (35) எனா என்றா ஏ: என்பன சொல்லிறுதியில் நின்று எண்ணுப் பொருளில் வரும் போதும், பெயர்ச்சொற்கள் இடைச் சொல் இன்றிச் செவ்வெண்ணாக வரும் போதும்தொகைச் சொல் வந்தே தீரும். ‘நிலனெனா நீரெனா இரண்டு’ என்பது போலக் காண்க. (42) |