1 இடம் வரையறுத்தோதாமையின் விழைவின் தில்லை தன்மைக்கண் வருதலும் மேலே பெறப்பட்டதனைப் பின்னுங் கூறினார். ஏனையிடத்து வாராதென்று நியமித்தற்கென்பது. தெய். இத்துணையும் பலபொருள் குறித்த இடைச் சொல் ஓதி, இனி, ஒரு பொருள் குறித்த இடைச்சொல் ஓதுகின்றாராகலின், மேற் சொல்லப்பட்டவற்றுள் ஒரு சொற்குப் புறனடையுணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : விழைவுப் பொருட்கண் வரும் தில்லைச் சொல் சொல்லுவான் மாட்டே நிகழும், எ-று, உதாரணம் மேற் காட்டப்பட்டது. நச். இது முற்கூறிய தில் என்பதற்குப் புறனடை கூறுகின்றது. இ-ள் : விழைவின் தில்லை தன்னிடத்து இயலும் ‘அம் மூன்றென்ப தில்லைச் சொல்லே’ (இடை.5) என்ற மூன்றனுள் விழைவின்கண் வரும் தில்லை தன்மைக் கண் அல்லது வாராது, எ-று. உ-ம் :2 வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழியரிவையைப், பெருகதில் அம்ம யானே’ (குறுந். 14) எனவே ஏனைய எல்லா இடத்திற்கும் உரியவாயின.
1. தில் என்பது விழைவு, காலம், ஒழியிசை என்னும் மூன்று பொருளில் வரும் என்று முன்னர் ஓதப்பட்டது. (இடை.5) அங்கு இடம் வரையறை செய்யப்படாமையால் தில் என்பது மூன்றிடத்தும் அம்மூன்று பொருளிலும் வரும் என்பது பெறப்படும். அதனால் விழைவுப் பொருளிலும் மூன்றிடத்தும் வரும் என்பது படும். அதனை நீக்கித் தன்மைக்கே வரும் ஏனையிடங்களில் வாராது என்பது என்பதை வலியுறுத்த இச்சூத்திரம் கூறினார். 2. பொருள் : ஒழுங்குபட்டு விளங்கும் கூரிய பற்களையும் சிலவான மொழிகளையும் உடைய அரிவையை யான் பெறுவேனாக. |