சொல்லதிகாரம் - இடையியல்82

வெள்.

இது  முற்கூறிய  தில்   என்னும்   இடைச்   சொற்குப்  புறனடை
கூறுகின்றது.

இ-ள் : விழைவு    காலம்   ஒழியிசை   யென்னும்     மூவகைப்
பொருள்களுள்    விழைவின்கண்  வரும் தில் என்னும் இடைச்  சொல்
தன்மையிடத்தில் வரும், எ-று.

தன்னிடம்     - தன்மையிடம்,   தன்னிடத்தியலும்  எனவே  தில்
என்பது   ஏனைப்படர்க்கை   முன்னிலையிடங்களில்   வாராது   என
நியமித்தவாறாம்.   விழைவின்  தில்லை  தன்னிடத்தியலும்    எனவே
ஒழிந்த  காலப்  பொருளிலும்  ஒழியிசைப்  பொருளிலும்   வரும் தில்
என்பன மூவிடத்துக்கும் உரியன என்பதும் பெறப்படும். தில்,   தில்லை
என ஈறுதிரிந்தது. உதாரணம் மேற்காட்டியவே .

ஆதி.

தில்,  காலம்  ஒழியிசை   நீத்து  விழைவுப்   பொருளில்  தன்மை
யிடத்தில் மட்டுமே வரும்.

மணம் பெறுகதில் யான் - விழைவு.

இதனை   ‘கழிவே   ஆக்கம்’    என்னும்     சூத்திரத்தையடுத்து
வைத்திருக்கலாம்.

சுப்.

இச்சூத்திரவுரையில்       உரையாசிரியர்   ‘விழைவின்    தில்லை
தன்மையிடத்திற்கே    யாவது...     எனவே,    மற்றைய   விரண்டும்
எல்லாவிடத்திற்கும்    உரிய    என்றவாறாம்’     என்று   கூறினார்.
நச்சினார்க்கினியரும்  அவ்வாறே  கூறினார்.    சேனாவரையர்  ‘இடம்
வரையறுத்   தோதாமையின்,   விழைவின்     தில்லை  தன்மைக்கண்
வருதலும்    மேலே      பெறப்பட்டதனைப்     பின்னும்   கூறினார்.
ஏனையிடத்து  வாராது   என்று நியமித்தற்கென்பது’  என்று  கூறினார்.
1 சேனா   வரையர்கூறும்   பொருள்   வடமொழி  நூன்  முறைக்குப்
பொருந்தியது.


1. தில் என்னும் இடைச்சொற்கும் வடமொழிச் சொற்கும் (?)  என்ன
தொடர்பு? வடமொழி நூன் முறை தழுவித் தமிழ்ச்சொற்கு உரை
கூறவேண்டிய இன்றியமையாமை யாது?