வ-று : 1 ‘எற்றுஎன் உடம்பின் எழில் நலம்’ எனவரும். எற்றேற்றம் இல்லாருள் யான்ஏற்றம் இல்லாதேன் என்பதும் அது. இஃது இரக்கப் பொருள்மேற்று என்பது. சேனா. இ-ள் : எற்று என்னும் சொல் இறந்த பொருண்மைத்து, எ-று. உ-ம் : ‘எற்றென் உடம்பின் எழில்நலம்’ என்பது என் நலம் இறந்தது என்னும் பொருள்பட நின்றது. ‘எற்றேற்ற மில்லாருள் யானேற்றம் இல்லாதேன்’ என்பதூஉம் ‘இப் பொழுது துணிவில்லாருட் டுணிவில்லாதேன்யான்’ என்று துணிவு இறந்தது’ என்பதுபட நின்றது. தெய். இதுவுமது. இ-ள் : எற்று என்னும் சொல் கழிந்தது என்னும் பொருண்மையுடைத்து, எ-று. உ-ம் : ‘எற்றென் உடம்பின் எழில்நலம்’ எனவரும். நச். இது, பொருள்படுமாறு கூறுகின்றது. இ-ள் : எற்று என் கிளவி இறந்த பொருட்டே - எற்று என்னுஞ் சொல் ஒன்றினிடத்து நின்றும் ஒன்று போயிற்று என்னும் பொருண்மையுணர்த்துதல் உடைத்து, எ-று. உ-ம் : ‘எற்றென் உடம்பின் எழில்நலம்’ இஃது, என் நலம் இறந்தது என நின்றது. ‘எற்றேற்றம் இல்லாருள் யானேற்றம் இல்லாதேன்’ என்பதூஉம் ‘இது பொழுது துணிவு இல்லாருள் இல்லாதேன் துணிவு யான்’ என்று துணிவு இறந்தது என்பது பட நின்றது.
1. என் உடம்பின் எழில்நலம் எத்தகைய இழிநிலையது என்று ஒருவன் இரக்கமாகக் கூறிய இக்கூற்றில் எற்று என்பது இரக்கப் பொருளில் வந்தது. ஏற்றம் (உயர்வு) இல்லாத பலருள்ளும் யான் ஏற்றம் இல்லாதேன் ஆவேன், இஃது எவ்வளவு தாழ்ந்தது என்னும் பொருளில் எற்று என்பது இரக்கம் காட்டியது. ஏற்றம் என்பதற்குத் துணிவு எனப் பொருள் கண்டனர் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் பிறரும். |