வெள். இஃது எற்று என்னும் இடைச்சொல்லின் இயல்பு கூறுகின்றது. இ-ள் : எற்று என்னும் சொல் கழிந்தது என்னும் இரங்கற் பொருண்மையினை யுடையதாம். எ-று. இறந்த பொருண்மையாவது, ஒன்றிடத்தினின்றும் ஒன்று போயிற்று எனக் கழிந்ததற் கிரங்குதலாகிய பொருண்மை. உ-ம் : ‘எற்றென் உடம்பின் எழில்நலம்’ என்புழி எற்று என்பது என்னுடம்பின் எழில்நலம் இறந்தது என இரங்குதற் பொருள்பட நின்றது. ‘எற்று ஏற்றம் இல்லாருள் யான் ஏற்றம் இல்லாதேன்’ எண்புழியும் ‘இப்பொழுது துணிவில்லாருள் துணிவில்லாதேன் யான : என் துணிவு இறந்தது’ என எற்று என்னும் இடைச்சொல் கழிந்தது என இரங்குதற் பொருள்பட வந்தமை காண்க. ஏற்றம் - துணிவு. ஆதி. எற்று - கழிந்ததே என்னும் இரங்கற் பொருளில் வரும் என் உடல் நலம் எற்று! கழிந்ததே. சுப். 1இளம்பூரணத்தில் ‘இஃது இரக்கப் பொருள்மேற்று என்பது’ என்ற வாக்கியம் உளது. இதனைப் பற்றிச் சேனா வரையரும் நச்சினார்க்கினியரும் ஒன்றும் கூறாமையால் இஃது இங்கு வேறொருவராற் சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டும் என்று தோன்றுகின்றது. பால : கருத்து : எற்று என்னும் இடைச் சொற்பொருள் இது வென்கின்றது. பொருள் ; எற்று என்னும் இடைச்சொல் கழிந்த நிலைமை உணர்த்தும் பொருட்டாய் வரும்.
1. ‘இஃது இரக்கப் பொருள் மேற்று’ என்னுந் தொடர் இறந்த பொருட்டே’ என்பதைக் குறிக்கும். ‘இறந்த பொருட்டே’ என்பது கழிந்ததனால் வரும் இரக்கப் பொருளைக் குறிக்கும் என்பது இளம்பூரணர் கருத்து. அதனால் வேறொருவராற் சேர்க்கப்பட்டதன்று என்க - சிவ. |