12 | தொல்காப்பியம் - உரைவளம் |
இனி இவ்வோத்து அகத்திணைக் கெல்லாம் பொது இலக்கண முணர்த்துதலின், அகத்திணையியலென்னும் பெயர்த்தாயிற்று. என்னை? எழுவகை அகத்திணையுள் உரிமை வகையான் நிலம் பெறுவன 14இவையெனவும் அந்நிலத்திடைப் பொது வகையான் நிகழ்வன கைக்கிளை பெருந்திணை பாலை யெனவுங் கூறலானும் 15அவற்றுட் பாலைத்திணை நில வகையான் நடுவணதெனப்பட்டு நால்வகை யொழுக்கம் நிகழாநின்றுழி அந்நான்களுள்ளும் பிரிதற் பொருட்டாய்த் தான் பொதுவாய் நிற்குமெனக் கூறலானும் முதல்கரு உரிப்பொருளும் உவமங்களும் மரபும் பொதுவகையாற் கூறப்படுதலானும், பிறவும் இன்னோரன்ன பொதுப் பொருண்மைகள் கூறலானு மென்பது இங்ஙனம் ஓதிய அகத்திணைக்குச் சிறப்பிலக்கணம் ஏனை ஓத்துக்களாற் கூறுப. | ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியுங் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின், அதனை அகம் என்றார். எனவே அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது ஓர் ஆகுபெயராம். | இதனை ஒழிந்தன, ஒத்த அன்புடையார் தாமே யன்றி எல்லார்க்குந் துய்த்துணரப் படுதலானும், இவை இவ்வாறிருந்ததெனப் பிறர்க்குப் கூறப்படுதலானும், அவை புறமெனவேபடும். இன்பமே யன்றித் துன்பமும் அகத்தே நிகழுமாலெனின் அதுவுங் காமங் கண்ணிற்றேல் இன்பத்துள் அடங்கும். ஒழிந்த துன்பம் புறத்தார்க்குப் புலானாகாமை மறைக்கப்படாமையிற் புறத்திணைப்பாலதாம். காம நிலையின்மையான் வருந் துன்பமும் ‘தாபதநிலை தபுதாரநிலை’ (79)யென வேறாம். | திணையாவது ஒழுக்கம்:- இயல் - இலக்கணம்; எனவே அகத்திணை யியலென்றது இன்பமாகிய ஒழுக்கத்தினது இலக்கண மென்றவாறாயிற்று. |
14, 15 குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல் ஒழுக்கங்கள் நிலம், மலை, காடு, வயல், கடல் அவற்றின் நிலங்கள் (சூ.2) |
|
|