இனித் தலைவி பிரிவுணர்த்தியவழிப் பிரியாதென்றிருத்தலும் பிரிந்துழிக் குறித்தபருவ மற்றென்று தானே கூறுதலும், பருவம் வருந்துணையும் ஆற்றியிருந்தமை பின்னர்க கூறுவனவும் போல்வன இருத்தல் அப்பருவம் வருவதற்கு முன்னர்க் கூறுவன ‘முல்லை சான்ற கற்பு’ அன்மையிற் பாலையாம். இனிப்பருவங்கண்டு ஆற்றாது தோழி கூறுவனவும் பருவமன்றென்று வற்புறுத்தினவும் வருவரென்று வற்புறுத்தினவும் தலைவன் பாசறைக்கண் இருந்து உரைத்தனவும் அவை போல்வனவும் நிமித்த மாதலின் இருத்தனிமித்தமெனப்படும். |
இனிக் கடலுங் கானலுங் கழியுங் காண்டொறும் இரங்கலும், தலைவன் எதிர்ப்பட்டு நீங்கியவழி இரங்கலும், பொழுதும் புணர்துணைப் புள்ளுங்கண்டு இரங்கலும் போல்வன இரங்கல். அக்கடல் முதலியனவுந் நீங்குவனவு மெல்லாம் நிமித்தமாம். |
புலவி முதலியன ஊடலாம். பரத்தையும் பாணனும் முதலியோர் ஊடனிமித்தமாம். |
ஏனையுவும்6 வழக்கியலான் நால்வகை நிலத்துஞ் சிறுபான்மை வருமேனும் பெரும்பான்மை இவை உரியவென்றற்குத் ‘திணைக்குரிப் பொருளே’ யென்றார். |
உரிமை குணமாதலின் உரிப்பொருள் பண்புத்தொகை. |
உதாரணம் : |
“கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை நாறிணர்க் குவளையோ டிடைப்பட விரைஇ யைதுதொடை மாண்ட கோதை போல நறிய நல்லோண் மேனி முறியினும் வாயது முயங்கற்கு மினிதே” |
(குறு.62) |
6. ஏனைய-கைக்கிளை பெருந்திணை இவை உரிப்பொருள் அல்லன என்பது இவர் கருத்து-இது முன் சூத்திரத்துக் கண்டது. |