நச்சினார்க்கினியர் |
26. ஏவன் மரபின்.......................மன்னர் |
இது முன்னர்ப் ‘பெயரும் வினையும்’ (20) என்பதனுள் திணைதொறுமரீஇய பெயருள் திணைநிலைப் பெயருமெனப் பகுத்த இரண்டனுள் திணைதொறுமரீஇய பெயருள் தலைவராதற்குரியாரை அதிகாரப்பட்டமையிற்கூறி, அங்ஙனந் தலைவராதற்குரிமையின் அடியோரையும் வினைவல பாங்கினோரையும் அதன்பிற்கூறி, பின்னர் நின்ற திணைநிலைப் பெயராதற்குச் சிறந்தார் அறுவகைய1ரெனப் பகுக்கின்றது. |
இதன் பொருள்:- மரபின் - வேத நூலுட் கூறிய இலக்கணத்தானே, ஏவல் ஆகிய நிலைமை யவரும் - பிறரை ஏவிக்கொள்ளுந்தொழில் தமக்குளதாகிய தன்மையையுடைய அந்தணர் அரசர் வணிகரும், அன்னர் ஆகிய அவரும் - அம்மூவரையும் போலப் பிறரை ஏவிக்கொள்ளுந் தன்மையாகிய குறுநில மன்னரும் அரசாற் சிறப்புப் பெற்றோரும், ஏனோரும் - நால்வகை வருணமென்று எண்ணிய வகையினால் ஒழிந்துநின்ற வேளாளரும், உரியர் - உரிப்பொருட் டலைவராதற்கு உரியர் என்றவாறு. |
ஆகிய என்பதனை ஏவலொடும் அன்னரொடுங் கூட்டுக.
|
எனவே, திணைநிலைப்பெயர் அறுவகையாயிற்று ‘வேந்து விடு தொழிலிற்................பொருளே’ (637) என்பதனான் வேளாளரே அரசராற் சிறப்புச் செய்யப் பெறுவ ரென்றுணர்க. இனி ‘வில்லும் வேலுங் களிறு.........முரிய’ (639) என்பதனான் ஏனோருஞ் சிறுபான்மை சிறப்புப் பெறுவரென்றுணர்க. உரிப்பொருட்டலைவர் இவரேயாதலைத்2 தான் மேற் பிரிவிற்குக் கூறுகின்றவாற்றானும் உணர்க. |
|
1. அறுவகையர் - அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் குறுநில மன்னர், அரசாற்சிறப்புப் பெற்றோர். |
2. உரிப்பொருட்டலைவர் இவரே எனக்கூறுவது ஆயர் வேட்டுவர் முதலியவாக முன்னர்க் கூறப்பட்ட திணைநிலைப் பெயர்களுக்கு மாறுட்டிருத்தல் காண்க. |