‘ஒன்றா’ என்னும் பெயரெச்சம் ‘பால்’ என்னும் பெயர் கொண்டு முடிந்தது. அது5 பொருள்வயி னூக்கிய பால் என அடையடுத்து நின்றது. |
நாளது சின்மையை ஒன்றாமையாவது, யாக்கை நிலையாது என உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை. |
இளமையது அருமையை ஒன்றாமையாவது. பொறுதற்கரிய இளமை நிலையாது என உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை. |
தாளாண் பக்கத்தை ஒன்றாமையாவது, முயற்சியான் வரும் வருத்தத்தை உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை. |
தகுதியது அமைதியை ஒன்றாமையாவது, பொருண்மேற் காதல் உணர்ந்தோர்க்குத் தகாது என உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை. |
இன்மையது இளிவை ஒன்றாமையாவது, இன்மையான் வரும் இளிவரவினைப் பொருந்தாமை. |
உடைமையது உயர்ச்சியை ஒன்றாமையவாது, பொருள் உடையார்க்கு அமைவு6 வேண்டுமென்றே, அவ்வமைவினைப் பொருந்தாமை; அஃதாவது மென்மேலும் ஆசை செலுத்துதல். |
அன்பினது அகலத்தை ஒன்றாமையாவது சிறந்தார் மாட்டுச் செல்லும் அன்பினைப் பொருந்தாமை. |
அகற்சியது அருமையை ஒன்றாமையாவது, பிரிதலருமையைப் பொருந்தாமை. |
பொருள் தேடுவார் இத்தன்மைய ராதல் வேண்டுமென ஒருவாற்றான் அதற்கு இலக்கணங் கூறியவாறு. |
5 அது - பால்என்பது. ஒன்றாப் பொருள் என நச்சினார்க்கினியர் முடிக்கும் திறம் காண்க. |
6 அமைவு சிந்தையின் நிறைவு. |