பக்கம் எண் :
தொடக்கம்
உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத் சூ.49403

(இ-ள்)     உள்ளுறை   உவமம்  ஏனை  உவமம்  என-மேற்கூறும்  உள்ளுறையுவமந்தான்  ஏனைய
உவமமென்று  கூறும்படி   உவமையும்   உவமிக்கப்படும்   பொருளுமாய்2  நின்றது;  திணை உணர்வகை
தள்ளாது  ஆகும்.  அகத்திணை  உணர்தற்குக்   கருவியாகிய   உள்ளுறை   உவமம்  போல3  எல்லாத்
திணையையும் உணருங்கூற்றைத் தள்ளாதாய் வரும்; நல்லிசைப் புலவர் செய்யுட் செய்யின் என்றவாறு.
 

எனவே ஏனையோர் செய்யிற் றானுணரும் வகைத்தாய் நிற்கும் என்றவாறாம்.4
  

“விரிகதிர் மண்டிலம் வியல்விசும் பூர்தரப்
புரிதலை தளையவிழ்ந்த பூவங்கட் புணர்ந்தாடி
வரிவண்டு வாய்சூழும் வளங்கெழு பொய்கையுட்
டுனிசிறந் திழிதருங் கண்ணினீ ரறல்வார
வினிதமர் காதல னிறைஞ்சித்தன் னடிசேர்பு
நனிவிரைந் தளித்தலி னகுபவண் முகம்போலப்
பனியொரு திறம்வாரப் பாசடைத் தாமரைத்
தனிமலர் தளைவிடூஉந் தண்டுறை நல்லூர”

(கலி-71)
 

என்பது     விரியுங்   கதிரையுடைய   இளஞாயிறு  விசும்பிலே  பரவா நிற்க, விடியற்காலத்தே இதழ்கண்
முறுக்குண்ட    தலைகள்   அம்முறுக்கு   நெகிழ்ந்த   செவ்விப்பூவிடத்துக்,   கள்ளை  வண்டு  நுகர்ந்து
விளையாடி,    அதனானும்    அமையாது   பின்னும்   நுகர்வதற்கு   அவ்விடத்தைச்   சூழ்ந்து  திரியும்
அச்செல்வமிக்க  பொய்கையுட்,  பசிய இலைகளுடனின்ற  தாமரைத்தனிமலர்,  தனக்கு  வருத்தஞ் செய்யும்
பனி ஒரு கூற்றிலே வடியாநிற்கத், தான் மிகச்செவ்வியின்றி அலருந் துறையினையுடைய ஊர என்றவாறு
 


2 உவமிக்கப்படும் பொருள் உருவிக்கப்படுவதாயும் நிற்பது எனக்கொள்க.

3 “அகத்திணை யுணர்தற்குக் கருவியாகிய உள்ளுறை யுவமம் போல” என்பது தேவையில்லாதது.

4 உவமையும்  பொருளுமாய்  வெளிப்படையில்  நிற்கும்  என்பது  கருத்து.  அதனால்  திணையும்
வெளிப்படையாம். உள்ளுறையின் பாற்படாது.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்