குறிப்பு :- சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே என்பதனால், இந்த நற்றிணைக்குரிய நானிலங்களும் ஈண்டுச் சொல்லாத வேறுமுறையாலும் கூறப்பெறும் என்பது பெறப்படும். இதில் நானிலப்பகுதியும் அவற்றிற்குரிய திணைப்பெயரும் நிரல் நிரையால் கூறப்பெற்றன, ஈண்டுக் கூறப்பெற்ற மாயோனுஞ் சேயோனுக் கருநிறக் கடவுளுஞ் செவ்வேளுமாகத் தொன்று தொட்டுத் தமிழர் தொழும் கடவுளராவர். கருநிறத்தைப் பழிப்பதன்றிப் பாராட்டுதல் தொல்லாரியர் வழக்கன்று: தமிழிலோ எழில் பாராட்டி “மாயோன்” எனவும் “மாயோயே” எனவும் வரும் பழம்பாட்டுகளின் தொடர்களும் குறிப்புகளும் இங்குச் சிந்திக்கத்தக்கனவாம். இனி, இந்திரனும் வருணனும் ஆரியர் வழிபடுங் கடவுளராய்க் கருதப்பெறினும், அறப்பழங்காலத்தே அவர் தமிழர் வழிபட்ட தெய்வங்களாகவும், பிறகு அவரிடம் ஆரியர் வாங்கித் தம் வழிபடு கடவுளராக்கிக் கொண்டன ரெனவும் சில மேனாட்டுப் புலவவரின் ஆராய்ச்சிக் கட்டுரைகளால் அறிகின்றோம். உண்மை யெதுவாயினும் பண்டைக் காலமுதல் இக்கடவுளர் பெயரும் வழிபாடும் தமிழகம் அறிந்ததென்பது தெளியப்படும். |