வயலும் வயல்சூழ்ந்த இடமும் வளமுடையன. முல்லை நிலத்தார்க்கு உணவுதருவன வயல் வளம் சேர்க்க உழவர் பலர் தேவை. அவர்க்குத் தலைவன் தேவை. அத்தலைவன் வேந்தன் (வேந்து-தலைமை) எனப்பட்டான். |
கடல் நோக்கி வழிபடுவோர்க்குக் கடலில் தோன்றிவந்து அருள் செய்பவன் வருநன் எனப்பட்டான். வருநன் வருணன் ஆயிற்று. |
காடுறையுலகம் முதலியவற்றுக்கு முல்லை முதலாகப் பெயர் வந்தது முல்லை முதலாகிய மலர்களால் என்பதும் முல்லை யொழுக்கம் முதலியவற்றால் என்பதுமாகிய கருத்துகள் உண்டு. அவ்வந்நிலங்களில் பெரும்பான்மையாகவும் சிறப்பாகவும் அமைந்த மலர்களாலேயே (மரத்தாலேயே) நிலங்களுக்குப் பெயர் அமைந்தன எனவும், பின்னர் நூலார் அவ்வந்நிலத்து ஒழுக்கங்களுக்கு முல்லை முதலாகப் பெயர் அமைத்தனர் எனவும் கொள்வதே நன்று குறிஞ்சிப்பூ பன்னிரண்டாண்டுக்கு ஒருமுறை பூக்கும் சிறப்புடைமை கருதி மலைக்குக் குறிஞ்சியென அப்பூவால் பெயர் அமைந்தது. |
ஆசிரியர் முதற் சூத்திரத்தில் அகன் ஐந்திணை உண்டென்றும் அடுத்து அவற்றுக்கு நிலம் கூறுமுன் பாலைக்கு நிலம் இன்று என்றும் அடுத்து ஒழுக்கம் கூறும் செய்யுளில் முதல் கரு உரிப்பொருள் உண்டு என்றும் அடுத்து முதற்பொருள் நிலமும் பொழுதும் என்றும் நிலம் பற்றி இச்சூத்திரத்தும் கூறிவரும் முறையை நோக்கும்போது, அகவொழுக்க அடிப்படையிலேயே கூறிவருவது புலனாம். அந்நிலையில் காடுறையுலகம் முதலிய நான்கும் முல்லை முதலிய நான்கன் பெயர்களால் கூறவும் படும் என்பது கொண்டு அந்நிலங்களுக்கு முல்லை முதலிய ஒழுக்கங்களாலேயே முல்லை முதலிய பெயர்கள் அமைந்தன என்பது ஆசிரியர் கருத்து எனலாம். ‘சொல்லிய முறையாற் சொல்லவும் படும்’ என்பதில் உம்மையை எச்சவும்மையாக்கி உலகினரால் முல்லை முதலிய மலரடிப்படையில் சொல்லப்படுதலேயன்றி நூலோரால் முல்லை முதலிய ஒழுக்க அடிப்படையிலும் கூறப்படும் என்றார் ஆசிரியர் எனக்கொள்ளலாம். |