பொருள்:- வைகுறு விடியல் மருதம் - பொழுது புலராத இரவினிறுதிப் பகுதியான வைகறையென்றும் சிறுபொழுதும், பொழுது புலர்ந்து எல்லெழுங் காலையான விடியலென்னும் சிறுபொழுதும், மருதத்திணைக்குச் சிறந்தனவாகும்; எற்பாடு நெய்தலால் மெய்பெறத் தோன்றும் - சுடர்படும் பகற்கால மூன்றாம் பகுதியாகிய சிறுபொழுது நெய்தற்றிணைக்கு உரிய பொழுதாதல் பொருள் பெறத் தோன்றுவதாகும். |
குறிப்பு:- இதில், “வைகுறிள வேனில் மருதம்” எனும் பாடம் மருதத்திணைக்கும் பொழுதும் பருவமும் வழுவாதுரைக்கும் சிறப்புடைத்து. இனி, எல்படும் பொழுதை எற்பாடென்பது தமிழ் வழக்கு. இன்றும் தமிழ் வழக்கறியா மேல் கடற்கரையில் படுஞாயிற்றின் திசையைப் ‘படுஞாறு’ என வழங்குதல் உலகறிந்த செய்தி. இதில் வைகுறு என்பது வைகறையின் மரூஉ “வைகறை விடியல்” என்றே இளம்பூரண அடிகள் பாடங்கொண்டிருப்பதும் இதனை வலியுறுத்தும். “வைகுறு விடியல்” என்பதில் எண்ணும்மை சூத்திரச் செறிவு நோக்கித்தொக்கது. இனி, “வைகுறு விடியல்” என்ற தொடரை வைகுறுதலாகிய விடியல் எனக்கொண்டு பொழுது புலர்தற்கு முற்பட்ட இறுதியிரவுக் காலத்தையே குறிக்குமென்றும், எற்பாடு என்பது சுடரெழுந்து வெயிலெறிக்கும் காலைப் பொழுதைக் குறிக்குமென்றும் ஆசிரியர் சிவஞான முனிவர் தம் முதற் சூத்திர விருத்தியில் கூறுகின்றார். வைகறையும் விடியலும் ஒருபொருட் கிளவிகள் என்னுமவர் கொள்கை பண்டைத் தமிழ்ப் புலவர்க்குடன்பா டன்றென்பது பழைய தொகை நூல்களில் பலவிடங்களில் பயின்று வரும் குறிப்புகளால் தெளியப்படும். |