நண்பகலாகிய சிறுபொழுதும் முதிர்வேனிலாகிய பெரும்பொழுதும் பாலைத்திணையாகிய பிரிவுக்குத் தனித்தனியுரிமை கொள்ளுதலேயுமன்றி, இவை தம்முட் கூடிய நிலையில் முதிர்வேனிலின் நண்பகல் பிரிவுக்கு மிகவும் சிறப்புரிமையுங் கொள்ளுமென்பது இச்சூத்திரத்தில் விளக்கப் படுகிறது. முதிர்வேனிற்காலம் ஆனியும் ஆடியுமாகிய திங்களிரண்டுமாம். இதில், வேனிலென்பது முதிர்வேனிற் பருவத்தையே குறிக்கும்; அதுவே பிரிவுக் குரித்தாகலின், முதிர்வேனிலிற் பிரிந்தார் கார் காலத்தில் கூடுவர் இளவேனில் கூடுதலுக்கே உரிய பருவமாகும். பின்பனிக் காலத்தில் பிரிந்தார் இளவேனிலிற் கூடுவர், முதிர்வேனில் பிரிவுக்குரித்தாதற்குச் செய்யுள்:- |