பெருந்திணை நடுவண் ஐந்திணையாகிய ஒத்த காமத்தின் மிக்கும் குறைந்தும் வருதலானும், எண்வகை மணத்தினும் பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வம் என்பன அத்திணைப்பாற் படுதலானும், இந்நான்கு மணமும் மேன்மக்கள் மாட்டு நிகழ்தலானும் இவை உலகினுள் பெருவழக்கு எனப் பயின்று வருதலானும் அது பெருந்திணை எனக் கூறப்பட்டது. 4அஃதேல் நடுவண் ஐந்திணையாகிய ஒத்த கூட்டம் பெருவழக்கிற்றன்றோ எனின், அஃது அன்பும் குலனும் முதலாயின ஒத்து வருவது உலகினுள் அரிதாகலின் அருகியல்லது வாராது என்க. |
இந்நூலகத்து ஒருவனும் ஒருத்தியும் நுகருங் காமத்திற்குக் குலனும் குணனும் செல்வமும் ஒழுக்கமும் இளமையும் அன்பும் ஒருங்கு உளவழி 5இன்பம் உளதாம் எனவும், கைக்கிளை, ஒரு தலை வேட்கை எனவும், பெருந்திணை ஒவ்வாக் கூட்டமாய் இன்பம் பயத்தல் அரிது எனவும் கூறுதலான், இந்நூலுடையார் காமத்துப் பயனின்மை உய்த்து உணர வைத்தவாறு அறிந்து கொள்க. |