பலர்பால் ஈறு
 

7.
  

ரஃகான் ஒற்றும் பகர இறுதியும்
மாரைக் கிளவி
1 உளப்பட மூன்றும்

நேரத் தோன்றும் பலரறி சொல்லே.
 

என் - எனின் பலரை யறியுஞ் சொல்லாமாறுணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ரஃகானாகிய ஒற்றும், பகரமாகிய  விறுதியும், மாரென்னும்
சொல்லுட்பட   இம்மூன்றும்  நிரம்பத்தோன்றும்  பலரையறியும் சொற்கு,
(எ - று.)

பலரையறியுஞ்  சொல்லாவன ரகரம்,  பகரம்,  மார்  என்பன வற்றை
 ஈறாகவுடைய சொற்கள், (எ - று.)

(எ - டு) உண்டார்,  உண்ணாநின்றார்,  உண்பார்,  கரியர், செய்யர்,
உண்ப,   தின்ப,   ஆர்த்தார்   கொண்மார்,    வந்தார்,    பூக்குழாய்
என்னையர்கணில்லாக தீது எனவரும்.

ரகரஒற்று மூன்றுகாலமும்  வினைக்குறிப்பும்  பற்றி  வருதலான் முன்
வைக்கப்பட்டது.  பகரம்  எதிர்காலமாகிய   ஒருகாலம்  பற்றிவருதலான்
உயிர்மெய்யெழுத்தேனும்     அதன்பின்     வைக்கப்பட்டது.     மார்
என்பதூஉம்    எதிர்காலம்பற்றி    வரினும்    ஒற்றாய்   வருதலானும்
பெருவழக்கின்றாதலானும் பகரத்தின்பின் வைக்கப்பட்டது.

நேரந்தோன்றும்  என்றதனான்,  உண்டனம்,   உண்ணா  நின்றனம்,
உண்குவம்,  கரியம், செய்யம் என  மகர  ஈறுங்  காட்டுவாருண்மையின்
“யானுமென்  னஃகமுஞ்  சாரும்”  என்புழி  அம்மகரம்  அஃறிணையும்
உட்படுத்துத்  திரிவுபட  நிற்றலின்   அம்மஃகான்  திரிபுடையவிவையே
திரிபல்லன  என்பன கொள்ளப்பட்டது. சொற்கு  என்பது  சொல்லெனச்
செய்யுள் விகாரத்தால் தொக்கதென உணர்க.

நான்காவது  விரியாது   நேரந்தோன்றும்    பலரறிசொல்   மாரைக்
கிளவியுளப்பட  மூன்றுமென  எழுவாயும்  பயனிலையுமாக்கிக்கொள்ளின்,
நேரந்தோன்றும்   பலரறிசொல்    இவையென   நேரத்தோன்றாதனவும்
பலரறிசொல்லுள  வென்ற   கருத்து   அருத்தாபத்திப்பட்டு   அவையுந்
தனக்குடன்பாடாய்           மேற்கூறுவனபோல          நிற்பதோர்
சொன்னோக்கப்படுதலானும்,    தோன்றம்   என    நின்ற    செய்யும்
என்றசொல்   முற்றோசைப்பட்டு,  பயனிலை   வகையாதற்   கியையாது
நிற்றலானும் அவ்வாறு கூறலாகாதென வுணர்க.

மேல்     ஈற்றினின்றிசைக்கும் பதினோரெழுத்தும் என்று பொதுவாக
ஈறென்று  கூறுகின்றாராகலின்  ஈண்டுப்  பகரவிறுதி  என்றுங்  கூறியது
என்னையெனில்,  ஆண்டுக்   கூறுகின்றது  மொழியது  ஈறென்பதன்றே!
ஈண்டகரம்    உயர்திணைப்பன்மையை     யுணர்த்துங்கால்    தானே
நின்றுணர்த்தாது    பகரவொற்றின்     மேலேறி    அதன்   பின்னின்
றுணர்த்துமென்றற்குக்      கூறியதென       வுணர்க.      இக்கருத்து
மேற்கூறுவனவற்றிற்கும் பொருந்தும்.

பகரவிறுதி     யென்பன இருபெயரொட்டுப் பண்புத்தொகை. அகரம்
பகரவொற்றோடு  புணர்ந்துநிற்றலாற்  பகரமெனவும்  பட்டது. அவ்வாறு
நிற்புழி அதனிறுதி நிற்றலின் இறுதியெனவும் பட்டது. 
            (7)


1உட்பட என்பதும் பாடம்.

******************************************************************