ஓம்படைப் பொருளில் இரண்டாவதும் மூன்றாவதும்
மயங்கல்
 

99.

1ஓம்படைக் கிளவிக் கையும் ஆனும்
தாம்பிரி விலவே
2 தொகவரு காலை.
 

என் - எனின், இதுவும் இரண்டாவதும் மூன்றாவதும் ஒத்தவுரிமைய
தொகைக்கண் வரும் காலத்து, (எ - று.)

(எ - டு.) புலிபோற்றிவா,   வாழியைய  என்பன.  இவை  புலியைப்
போற்றிவா  எனவும்,  புலியால்  போற்றிவா எனவும் விரியும் என்பது.
புலி என்றது புலியான் வரும் ஏதத்தினை.

ஓம்படை யென்பது    போற்றுதல்,    ஈண்டும்     இரண்டாவது
செயப்படுபொருளோடு ஏதுப்பொருள் படுகின்றது போலும்.

தொகவருகாலை என்றதனால்   இவ்வேற்றுமை   மயக்கமெல்லாம்
தொக்குழியே மயங்கு மென்பது கொள்ளப்பட்டது.

முன்னே     ஆனுருபினோடு இன்னுருபும் ஏதுப்  பொருட்டாகும்
என்றோதப்  பட்டமையின்,  ஒன்றின முடித்தல் என்பதனான் புலியிற்
போற்றிவா என ஐந்தாவது கொள்க.                        (14)


1. இந்நூற்பாவிற்குப் பொருள் காணப்படவில்லை.

2. ‘தொகை வருகாலை’  என்பது   இளம்பூரணர்,  சேனாவரையர்,
தெய்வச்    சிலையார்   ஆகியோரது   பாடம்.  இவரது   பாடமும்
நச்சினார்க்கினயரது பாடமும் ஒன்றே.

******************************************************************