வாழ்ச்சிக் கிழமையில் ஆறாவதும் ஏழாவதும்
மயங்கல்
 

100.

ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்(கு)
ஏழும் ஆகும் உறைநிலத் தான.
 

என் - எனின்,    ஆறாவதனோடு    ஏழாவதும்    மயங்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ஆறாவதனிடத்து   வாழ்ச்சி   யென்னும்  உரிமைக்கு
ஏழாவதும் ஆகும். யாண்டோ எனின், ஆண்டு அஃதுறைநிலத்துக்கண்,
(எ - று.)

(எ - டு.) காட்டு  யானை,  காட்டதுயானை, காட்டின்கண் யானை
என விரியும்.

உறை     நிலத்தான  என்றதனால்  உறையா  நில   மாயக்கால்
ஆறாவதன்கண்  வந்ததாகாது ஏழாவதுதானே யாம் என்றவாறு. அஃது
ஊருள்  யானையாய்க்  காட்டுள்  மேய விட்டதனைக் காட்டு யானை
யென்னும் வழிக் கொள்க.

மற்று    இஃது வாழ்ச்சியும் ஆறன் மருங்கின் வாழ்ச்சியாயினவாறு
என்னை ? அஃது யானைக்காடு என்பதன்றே; ஆண்டு யானையுட்காடு
என   ஆகாதால்   எனின்;   யானை   காட்டின்  கண்  வாழ்தலால்
உடைமையாயிற்றன்றே.  அதனால்  காட்டியானையென அக்காட்டிற்கு
யானையை   உறுப்பாகக்  கூறும்வழி  வாழ்தலடியாக  நின்றதாகலின்,
அதனையும் வாழ்ச்சிக் கிழமை யென்று கூறியவாறு போலும். அதனாற்
போலுமென்றது சிறுபான்மை, (எ - று.)                      (15)

******************************************************************