என் - எனின், நான்காவதன்பொருள் ஆறாவதன்கண் செல்லுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) கு என்னும் வாய்பாடு தொக்கு வருகின்ற கொடைத் தொழிலினை யேற்றுக் கொண்டு நின்ற சொல் மயங்குமாறு கூறின், அப்பொருண்மை, ஆறாவது உடைமைப் பொருளாதற்கு உரித்துமாம், (எ - று.) (எ - டு.) நாகர்பலி என்பது நாகர்க்குப் பலி, நாகரது பலி என விரியும். கொடைக்கிளவி என்னாது எதிர்கிளவி என்றதனான் இவ்வாறு மயங்குவது எதிர்கிளவி அல்லாக்கால் மயங்காது என்பது. எதிர்தல் என்பது விழுப்பமுடையாரை நுதலியக்காற் கொண்டு வைத்து விரும்பிக் கொடுப்பது. மற்றிது நிகழ்தலின் மையின் நான்காவது ஆயவாறு என்னை யெனின், நிகழ்ந்ததேயன்று கொடை நிகழ்கின்றது. நிகழ்வதும் பொருண்மை வகையாற் கொடையெனப்படும் என்பது. (16) |