என் - எனின், ஐந்தாவதும் இரண்டாவதும் மயங்குமாறுது உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) அஞ்சுதல் என்னும் பொருண்மைக்கு ஐந்தாவதும், இரண்டாவதும் தம்மில் ஒத்த நிலைமையவாம் பொருள்படுமிடத்து என்றவாறு. (எ - டு.) புலி அஞ்சும் என்பது புலியை யஞ்சும் என விரியும். அவ்வச்சம் கள்ளரின் அஞ்சும் என்னும் வழக்கிற் பொருள்படு நிலைமையும் உண்டு; ஈண்டு அது கொள்ளற்க. ஓம்படை என்றதற்கண் கூறியவற்றால் புலியான் அஞ்சும் என மூன்றாவதன் வரவும் கொள்க. (17) |