என் - எனின், வேற்றுமை மயக்கத்திற்கும் புறனடையுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேல் எடுத்தோதப்பட்ட அத்தன்மையன பிறவுமாகிய, பழையதாகிய நெறிமுறையினைப் பிழையாது, உருபானும் பொருளானும் தத்தம்வடிவு தடுமாறி, தனக்குரிய இடம் பிறிதின் இடமாகிய அவ்விரண்டிடத்தும் நிலைபெறுகின்ற வேற்றுமையுள் எல்லாம் அமையா வழுவென்று கழிக்கப்படுதலைத் தன்னிடத்து உடையவல் ஆராய்வார்க்கு, (எ - று.) இதனாற் சொல்லியது வேற்றுமையோத்தின்கண் இன்ன பொருட்கு இன்னது உரித்தென எடுத்தோதப்பட்ட வேற்றுமைகள் அவ்வப் பொருட்கு, உரியவாறாய் நில்லாது பிறபொருட்கண்ணும் சென்று மயங்குதலுண்மைக்கண்டு இவை வழுவன்றோ என்று வினாய மாணாக்கற்கு, அவை மேற்றொட்டுப் பிறபொருண்மேலும் வழக்கு முடிவினை ஆராய்ந்த முதனூலாசிரியர்களும் வழங்கி வருதலான் வேற்றுமைவழு என்று புறத்திட்டாரல்லர். அதனானே, யானும் அம் முடிபே நேர்ந்தேன் என்பது கூறியவாறு. இதுவும் மரபு வழுவமைதி. அன்ன பிறவும் என்றதனால் கொண்டவற்றிற்கு உதாரணம், முறைக்குத்துக் குத்தினான் என்பதோர் தொகை, முறையாற் குத்தினான் என ஐந்தாவதும், ஏதுப் பொருட்கண் மயங்கி விரிந்தது. இனித் தொகையன்றி நின்று, கடலொடு காடு ஒட்டாது என்னும் வழக்கின்கண் கடலைக் காடு ஒட்டாது என இரண்டாவது மயங்கி வந்தது. இன்னுந் தொகையல்லாத தந்தையொடு சூளுற்றான் என்னும் வழக்கின்கண் தந்தையைச் சூளுற்றான் என இரண்டாவது மயங்கி வந்தது. பிறவும் அன்ன. (18) |