பல உருபு தொடர்ந் தடுக்கியவழிப் படுவதோர்
இலக்கணம்
 

104.

உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி
ஒருசொல் நடைய பொருள்செல் மருங்கே.

 

என்  -  எனின், பல உருபு  தொடர்ந்தடுக்கியவழிப்  படுவதோர்
இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ஐ   முதலிய    அறுவகை    யுருபும்  தம்  பொருள்
தொடர்ச்சிபட          அடுக்கிவருகின்ற         அவ்வேற்றுமைப்
பொருண்மையினையுடைய  சொற்கள், அவ்வடுக்கின் கடைக்கண்நின்ற
வேற்றுமைச்  சொல்லிற்கு முடிபாகிய சொல்லினையே தமக்கு முடிபாக
வுடைய, பொருள்படும் இடத்து, (எ - று.)

(எ - டு.) யானையது    கோட்டை    நுனிக்கண்   குறைத்தான்.
யானையது என்பது கோடு  என்பதனோடு தற்கிழமைப்பட்டு ஆண்டே
முடிந்தது.  நுனிக்கண்  என்னும்  ஏழாவது குறைத்தான் என்பதனோடு
முடிந்தது.

இடைக்கண்நின்ற     கோடு என்னும் இரண்டாவது முடிபு இன்றி
நின்றது.  அவ்வாறு தனக்குரியதோர் முடிபின்றே எனினும் ஏழாவதன்
முடிபோடு   முடிந்ததாகக்   கொள்ளப்படும்  அவ்வாறு  பொருள்பட
நின்றமையான் என்பது.

தினையிற்     கிளியைக்  கடியும்  என்பது  தினையின்  என்னும்
ஐந்தாவது  கிளியை  என்னும் இரண்டாவதன் வினையொடு முடிந்தது.
பிறவுமன்ன.

அதிகாரத்தான் இதுவும் ஓர் மரபு வழுவமைதி என உணர்க.  (19)

******************************************************************