நான்காவது ஏனையுருபுகளின் பொருளொடு
மயங்கல்
 

112.

இதன திதுவிற் றென்னும் கிளவியும்
அதனைக் கொள்ளும் பொருள்வயி னானும்
அதனாற் செயற்படற் கொத்த கிளவியும்
முறைக்கொண் டெழுந்த பெயர்ச்சொற் கிளவியும்
பால்வரை கிளவியும் பண்பின் ஆக்கமும்
காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவியும்
பற்றுவிடு கிளவியும் தீர்ந்துமொழிக் கிளவியும்
அன்ன பிறவும் நான்கன் உருபில்
தொன்னெறி மரபின தோன்ற லாறே.

 

என்  - எனின்,   நான்காம்  வேற்றுமை,  ஏனைய  வேற்றுமைக்
கண்ணெல்லாம் சென்று மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) இப் பொருளினுடையது தான்  இத் தன்மைத்து என்று
சொல்லப்படும்   ஆறாவதன்   பொருண்மையும்,  ஒன்றனையொன்று
கொண்டிருக்கும்     என்ற      சொல்லப்படும்     இரண்டாவதன்
பொருண்மையும்,    ஒன்றான்    ஒன்று    செயப்பாடுடைத்தாதற்குப்
பொருந்துதல் என்னும் மூன்றாவதன் பொருண்மையும், முறைமையைக்
கொண்டெழுந்த    ஆறாவதன்    பெயர்ச்சொல்லாகிய   சொல்லின்
பொருண்மையும்,        எல்லைப்பொருண்மையை        வரைந்து
உணர்த்தலுடைய  ஐந்தாம் வேற்றுமைப் பொருண்மையும், பண்பினாகி
வருகின்ற      ஐந்தாவதன்       பொரூஉப்      பொருண்மையும்,
காலப்பொருண்மையான்    அறியப்படுகின்ற   ஏழாம்   வேற்றுமைப்
பொருண்மையும்,           பற்றுவிடுதலாகிய          ஐந்தாவதன்
நீக்கப்பொருண்மையும், தீர்தல் என்னும் வாய்பாட்டதாகிய ஐந்தாவதன்
நீக்கப்பொருண்மையும்       அத்தன்மையன       பிறவேற்றுமைப்
பொருளிடத்து  நான்கனுருபில்  அடைத்துக்  கூறுதலைப் பழையநெறி
முறையாகவுடைய ; அவை தோன்றும் நெறிக்கண், (எ - று.)

(எ - டு.) யானையது  கோடு கூரிது  என்புழி யானைக்குக் கோடு
கூரிது   என்றாயிற்று.   இவனைக்   கொள்ளும்  இவ்வணி  என்புழி
இவனுக்குக் கொள்ளும் இவ்வணி என்றாயிற்று. வாயாற்றக்கது வாய்ச்சி
என்புழி  வாய்க்குத்தக்கது  வாய்ச்சி  என்றாயிற்று.  ஆவினது கன்று
என்புழி  ஆவிற்குக்  கன்று  என்றாயிற்று. கருவூரின் கிழக்கு என்புழி
கருவூர்க்குக்  கிழக்கு  என்றாயிற்று.  சாத்தனின்  நெடியன் என்புழிச்
சாத்தற்கு  நெடியன்  என்றாயிற்று. மாரியுள்வந்தான் என்புழி மாரிக்கு
வந்தான்  என்றாயிற்று. ஊரிற்பற்று விட்டான் என்புழி ஊர்க்குப் பற்று
விட்டான்  என்றாயிற்று. ஊரில் தீர்ந்தான் என்புழி ஊர்க்குத்தீர்ந்தான்
என்றாயிற்று.

இனி,  அன்னபிறவும் என்றதனால் ஊரிற்சேயன் என்புழி, ஊர்க்குச்
சேயன்     என்றாயிற்று.    காட்டிற்கணியன்    என்பதும்    அது.
இவையெல்லாம் உருபும் பொருளும் உடன் மயங்கின   எனக்கொள்க.

மற்று    இம் மயக்கம் ‘அன்ன பிறவும்’ என்புழி அதிகாரத்தானே
அடங்காதோ   எனின்,   அஃது   ஒன்றனோடு   ஒன்று  பரிமாறும்
அதிகாரத்தது;   இஃது   ஒன்று   பலவற்றோடு  சென்று  மயங்ககும்
அதிகாரத்தது; ஆகலின் அதனுள் அடங்காது என்ப.
           (27)

******************************************************************