ஆகுபெயரது இயல்பு
 

116.

முதலிற் கூறும் சினையறி கிளவியும்
சினையிற் கூறும் முதலறி கிளவியும்
பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரும்
இயன்றது மொழிதலும் இருபெய ரொட்டும்
வினைமுத லுரைக்கும் கிளவியொடு தொகைஇ
1அனைமர பினவே ஆகுபெயர்க் கிளவி.
 

என் - எனின், ஆகுபெயராமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) முதற்பொருள் ஏதுவாகக் கூறப்படும் சினைப்பொருளை
அறியுஞ்சொல்லும்,     சினைப்பொருள்     ஏதுவாகக்    கூறப்படும்
முதற்பொருளை   அறியுஞ்   சொல்லும்,   ஒரு   பொருள்   பிறந்த
இடத்தினைச்  சொல்ல  அவ்விடத்தினால்  பிறந்த  பொருளை உணர
நிற்கும்   சொல்லும்,  ஒரு  பண்பினைச்  சொல்ல  அப்பண்படைந்த
பொருளினை  விளங்க நிற்குஞ்சொல்லும், ஒரு தொழிலினைச் சொல்ல
அத்தொழில்  நிகழ்ச்சியான்  அதனை  உணர நிற்குஞ்சொல்லும், ஒரு
பொருள்மேல்  இரண்டு பொருளினை ஒழிய அதனையுடைய வேறோர்
பொருளினை  உணர  நிற்குஞ் சொல்லும், ஒரு வினையை நிகழ்த்திய
கருத்தாவினைச்   சொல்ல   அதனால்  நிகழ்த்தப்பட்டதனை  உணர
நிற்குஞ்  சொல்லும்,  இவை  எழுந்த  அம்மரபில் தொக்க தம்பெயர்
கூறியவழிக்  காரணமாய்  நின்றவற்றையே தம்  இலக்கணமாகவுடைய
சொற்கள் ஆகுபெயர்ச் சொல்லாம், (எ - று.)

(எ - டு.)   முதலிற்கூறும்   சினையறிகிளவி : கடுத்தின்றான்,
தெங்கு தின்றான் என்பன.

சினையிற்கூறும் முதலறிகிளவி : இலைநட்டு         வாழும்,
பூநட்டுவாழும் என்பன.

பிறந்த வழிக்கூறல் : குழிப்பாடி.
பண்புகொள் பெயர் : நீலம் என்பல்.
இயன்றது மொழிதல் : ஏறு, குத்து.
இருபெயரொட்டு  : பொற்றொடி.

இஃது  அன்மொழித் தொகையன்றோ எனின், படுத்தலோசைபட்ட
வழி    அன்மொழித்தொகையாம்     ; எடுத்தலோசைபட்ட    வழி
ஆகுபெயராகும் என்பது.

வினைமுதலுரைக்குங் கிளவி : தொல்காப்பியம், கபிலம்.   (31)


1 ‘அனைய மரபினவே’ என்பது தெய்வச்சிலையார் சேனாவரையர்
நச்சினார்க்கினியர்  ஆகியோரது  பாடம். ‘அனைமரபினவே’ என்பது
இவ்வுரையாசிரியருக்கும் இளம்பூரணருக்கும் பாடம்.

******************************************************************