இதுவுமது
 

118.

1வேற்றுமை மருங்கில் போற்றல் வேண்டும்.
 

என் -  எனின், இதுவும்   ஆகுபெயர்க்கண்ணே   படுத்ததோர்
இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)  முற்கூறிய  ஆகுபெயர்கள்    தத்தம்  பொருட்கண்
ஆங்கால் தாம்   முன்பு  உணர்த்தி   நின்ற   பொருட்கு  வேறன்றி 
அதனோடு தொடர்ந்த  பொருளோடு பொருந்தி  நிற்றலும், அம்முதற்
பொருளோடு பொருத்தமில்லாத  கூற்றினான்  நின்று  பிறிது பொருள்
உணர்த்தலும்   என்று    சொல்லப்படுகின்ற     அவ்விரு   வகை 
இலக்கணத்தினையும் உடைய சொல்லுங்காலத்து, (எ - று,)

(எ - டு.) தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணல்; தெங்கு,  கடு
என்னும்  தொடக்கத்தன.  ஒப்பில்வழியால்  பிறிது  பொருள் சுட்டல்;
குழிப்பாடி, பொற்றொடி என்பன.

இதனாற்    சொல்லியது ஒன்றனது பெயரை ஒன்றற்கு இடுங்கால்,
அம்முதற்  பொருளோடு தொடர்பு  உள்வழியே இடவேண்டும் என்று
கருதின்  அது வேண்டுவ தில்லை. அம்முதற்பொருளோடு தொடராது
பிறவற்றானும் இயைபுள் வழியும் இடலாம் என்பது கூறியவாறாயிற்று.

அஃதேல்     இச்  சூத்திரப்  பொருண்மை  மேல்   சூத்திரத்து
ஓதியாவற்றானே   பெற்றாமன்றோ   எனின்,  பெற்று  நின்றதனையே
இவ்வாறு   ஒப்பில்   வழியும்   ஆம்   என  மாணாக்கனை  நன்கு
தெளிவித்தற் பொருட்டுக் கூறினார் என்பது.                  (32)

இதுவும்    ஆகுபெயர்க்கண்ணே     கிடந்ததோர்     இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)  அவ்வாகுபெயர்களை ஐ முதலிய  ஆறு    வேற்றுமைப்
பொருண்மையிடத்தினும்    இயைபுடைமையைப்  பாதுகாத்து   அறியல்
வேண்டும் ஆசிரியன், (எ - று.)

(எ - டு.) பொற்றொடி  ஆகுபெயர்,  பொற்றொடியைத்  தொட்டான்:
பொற்றொடியை என இரண்டாவதன் பொருண்மைத்து.

தொல்காப்பியம்  என்பது   தொல்காப்பியனால்   செய்யப்பட்டதென
மூன்றாவதன் பொருண்மைத்து.

தண்டூண்   என்னும்  ஆகுபெயர்  தண்டூணாதற்குக்  கிடந்தது  என
நான்காவதன்
பொருண்மைத்து.

பாவை   என்னும்   ஆகுபெயர்   பாவையினும்   அழகியாள்  என
ஐந்தாவதன் பொருண்மைத்து.

கடு   என்னும்  ஆகுபெயர்   கடுவினது   காய்  என  ஆறாவதன்
பொருண்மைத்து.

குழிப்பாடி என்னும்  ஆகுபெயர்  குழிப்பாடியுள்  தோன்றியது  என
ஏழாவதன் பொருண்மைத்து. பிறவும் அன்ன.

இதனாற்     சொல்லியது  முன்  ஒப்பில் வழியால் பிறிது  பொருள்
சுட்டலுமாம்  என்றமையின்  அப்பிறிது பொருள் சுட்டியவாறு  பாகுபாடு
பெறுங்கொல்லோ  எனின்,  இவ்வாறு வேற்றுமைப்பொருள்  உள்வழியே
பெயராவது ; பிறவழி யாகாது என்று கூறியவாறு.                (33)


1. இவ்வுரையாசிரியரும்,   இளம்பூரணரும்,   நச்சினார்க்கினியரும்
இதனைத்  தனி  நூற்பாவாகக்  கொள்ள,  சேனாவரையரும் தெய்வச்
சிலையாரும்   இதற்கு  முன்னுள்ள  நூற்பாவோடு  இணைத்து  ஓரே
நூற்பாவாகக் கொண்டனர்.

******************************************************************