அளவும் நிறையும் ஆகுபெயர் எனல்
 

119.அளவும் நிறையும் அவற்றொடு கொள்வழி
உளவென மொழிப உணர்ந்திசி னோரே.
 

என் - எனின், இன்னொருசார் ஆகுபெயர் உணர்த்தல் நுதலிற்று.

(இ - ள்.) அளவுப் பெயரினையும்  நிறைப்பெயரினையும் மேற்கூறிய
ஆகுபெயரோடு    கொள்ளுமிடங்கள்     உள   என்று   சொல்லுவர்
உணர்வுடையோர், (எ - று.)

(எ - டு.) நாழி  உழக்கு  என இவை  அளவுப்பெயர். ஈண்டு இதன்
பொருள் அதற்காயிற்றோ எனின்,  அளக்கப்பட்ட  பொருட்கண்  கிடந்த
வரையறைக்கண்  அப்பெயர்  பொருட்காயிற்று;   எனக்கொள்க.  தொடி,
துலாம் என்பன நிறைப்பெயர்: ஈண்டு வரையறைக் குணர்த்தினான் பெயர்
பொருட்காயிற்று என உணர்க.

மற்றிவை     1“கிளந்தவல்ல” என்னும் புறநடையுள்  அடங்காவோ
எனின், இவற்றை உலகத்தார்க்கும் பெயர்க்  குறிப்பு என்று  கொள்ளாது
அப்பொருட்குப்    பெயர்போலக்   கொண்டமையின்  வேறு  கூறினார்
எனக் கொள்க.                                           (34)


1.வேற்றுமை மயங்கியல், 35ஆம் நூற்பா.

******************************************************************