என் - எனின் அஃறிணைக்கண் பலவறிசொல்லாமாறுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) அ, ஆ, வ என்று சொல்லவருகிற இறுதிகளையுடைய அக்கூற்று மூன்று சொல்லும், பலவற்றை யறியுஞ் சொல், (எ - று.) (எ - டு) உண்டன, உண்ணாநின்றன, உண்பன, குறிய, கரிய, செய்ய என இவைகள் அகரவீற்றன. உண்ணா, தின்னா என இவை ஆகாரவீற்றன. உண்குவ தின்குவ என இவை வகரவீற்றன. அகரம் மூன்று காலமும் வினைக்குறிப்பும் கோடலின் முன் வைக்கப் பட்டது. ஆகாரம் எதிர்காலமாகிய ஒரு காலமே கோடலானும், எதிர் மறை வினைக்கணல்லது வாராமையானும் அதன் பின் வைக்கப்பட்டது. வகரமும் அகரமென அடங்குமே யெனினும் அவ் வகரம் போல மூன்று காலத்தும் வினைக்குறிப்பின் கண்ணும் வாராது உண்டல், தின்றல் இவை முதலாகிய தொழில் தொறும் - உண்குவ, தின்குவ என எதிர்காலம் பற்றி வேறோர் வாய்ப்பாட்டான் வருதலான் அவ்வகரத்தோடு அடங்கா நிலைமைச் சிறப்புடைய அகரத்தை முன் கூறி இதனை அதன்பின் வைத்தார் என்பது. இக்கடா ஈற்றிற்கு மொக்கும். பலவறிச்சொல் என்னும் எழுவாய்க்கு இறுதி என்பது பயனிலையாக்கின் அப்பால் மூன்று என்பது நின்று வற்றுமாகலின், மூன்று என்பதையே பயனிலையாக்கி இறுதி என்பதனை இறுதியையுடைய மூன்று எனப் பயனிலைக்கு அடையாக்கி உரைக்க. (9) |