ஆகுபெயர்க்குப் புறனடை
 

120.கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும்
கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே.
 

என் - எனின்,  மேற்கூறிய  ஆகுபெயர்க்கண்  மேல்  எடுத்தோதின
வல்லாதன  வேறு  பல   தோன்றினும்  அவ்வெடுத்தோதப்பட்டவற்றின்
இயல்பினானோ உணர்ந்து கொள்க (எ - று.)

(எ - டு.) யாழ்கேட்டான்,  குழல் கேட்டான்  என   அவற்றினாகிய
ஓசைமேல்  நின்றன,  பசுப்போல்வானைப்   பசு   என்ப, பாவைபோல்
வாளைப் பாவை என்ப.

இனி   ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் என்னும் எண்ணுப் பெயர்களும்
வரையறைப்   பண்பின்   பேர்  பெற்ற  ஆகு  பெயர்  எனக்கொள்க.
அவ்வெண்ணுப்பெயரின்  அறிகுறியாகிய   அலகுநிலைத்  தானங்களும்
அப் பெயரவாயின எனக் கொள்க.

இனி   அகரமுதலாகிய எழுத்துக்களை உணர்த்துதற்குக் கருவியாகிய
வரிவடிவுகளும்  அப்பெயரவாம்.  தாழ்குழல்,   திரிதாடி  என்பன  இரு
பெயரொட்டு  இன்மையின்  ஈண்டே கொள்க.  மண்ணானாய  கலத்தை
மண்  என்றும், பொன்னானாய கலத்தைப்  பொன்  என்றும்  இவ்வாறே
காரணத்தின்  பெயரினைக் காரியத்துக்கு  இட்டும் கடி  சூத்திரத்திற்காக
இருந்த  பொன்னைக்  கடிசூத்திரம்  என்றும்  தண்டூணாதற்குக்  கிடந்த
மரத்தினைத்  தண்டூண்  என்றும் இவ்வாறே  காரியத்தின்  பெயரினைக்
காரணத்திற்கு இட்டும் வருவன எல்லாம் கொள்க.

இனி     எழுத்து எனவும் சொல் எனவும் கூறிய  இலக்கணங்களைக்
கூறிய நூல் மேல் ஆகுபெயராய்  வருவனவும் ஈண்டே  கொள்க. வேறு
என்றதனான் அவ் வாகுபெயர்கள்  தொல்காப்பியம்,  வில்லி, வாளி என
ஈறுதிரிந்தனவும்   ஈண்டே   கொள்க.    இவ்வாகு    பெயரை   இவ்
வோத்தினுள்  ..................துவும்  எழுவாய்   வேற்றுமை   மயக்கமாகலின்
ஈண்டே கூறினார் என்பது.                                  (35)

வேற்றுமை மயங்கியல் முற்றும்

******************************************************************