என் - எனின், உயிரீற்று உயர்திணைப் பெயருள் விளியேற்பன இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேல் விளியேற்கும் எனப்பட்டவை தாம் இ, உ, ஐ, ஓ, என்று சொல்லப்பட்ட ஈறுகளையுடைய அக்கூற்று நான்கு பெயரே உயர்திணையிடத்து மெய்ப் பொருளினைச் சுட்டிய விளியினைக் கொள்ளும் பெயராவன, (எ - று.) உயிரீற்று உயர்திணைப் பெயர்களுள் விளியேற்பன இந்நான்கும் எனவே ஒழிந்த உயிரீறு விதியேலா என்பதூஉம் இதனாற் பெற்றாம். உயிரீறு பன்னிரண்டும் உயர்திணைப் பெயர்க்கு ஈறாமோ எனின் அஃது ஈண்டு ஆராய்ச்சி யன்று; ஈறாவனற்றுள் விளியேற்பன இவை என்றவாறு. மக என்னும் அகரவீறும், ஆடூஉ மகடூஉ என்னும் உகரவீறும் இந்நிகரன விளிஏலாதன எனக் கொள்க. மெய்ப்பொருள் சுட்டிய என்றதனான், இவ்வீற்று அஃறிணைப் பெயர்களும் இவ்வுயர்திணைபோல விளிஏற்பன என்பது கொள்ளப்படும். அவை தும்பி தும்பீ எனவும், முல்லை முல்லாய் எனவும் வரும். (3) |