என் - எனின், வேண்டாகூறி வேண்டியது முடித்தலை உணர்த்தல் நுதலிற்று. என்னை, வேண்டா கூறியவாறு எனின் அவைதாம் இ உ ஐ ஓ என்புழி இந்நான்கு ஈறும் விளியேற்கும் ஒழிந்த உயிரீறு விளியேலா என்பது பெற்றமையின் என்பது. இனி வேண்டியது முடித்தவாறு என்னை யெனின், ஒழிந்த உயிரீறு வேற்றுமை ஏலா என்று இன்னும் மேற் சொல்லிய உயிரீறு விளியேற்கும் என்றமையின். (இ - ள்.) மேற்கூறிய நான்கு உயிரீறே யன்றி ஒழிந்த உயிரீறுகள் உயர்திணைப் பெயரிடத்துத் தாம் விளித்தலைக் கொள்ளா என்று சொல்லுவர் புலவர், (எ - று.) இவ்விதி மேலே பெற்றாமன்றோ எனின், மேற் கூறியவாறன்றி விளியேற்கும் என்பது கருத்தெனக் கொள்க. கணி - கணியே என இகரஈறு ஏகாரம் பெற்றது. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. (7) |