என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று; என்னை? ஈகாரமாதல் விலக்கி இயல்பாய் விளியேற்கும் என்றமையின்.
(இ - ள்.) அளபெடுத்தலான் மிகுகின்ற இகரமாய இறுதியையுடைய பெயர் இயல்பாய் விளியேற்கும் செய்தியையுடைய, (எ - று.) (எ - டு.)1தொழீஇஇஇ, தொழீஇ என்பது பெயர். விளியும் அஃதே எனக் கொள்க. இஃது இயல்பு. இயற்கைய என்று பன்மை கூறிய அதனான் இவ்வளபெடை மூன்று மாத்திரையில் நிமிர்ந்து நிற்கும் என்று கொள்ளப்படும். செயற்கைய என்றதனான் இவ்வளபெடைப் பெயர் எழுதும்வழி ஐந்தெழுத்திட்டு எழுதுக என்று கொள்ளப்பட்டது. (8)
1. தொழீஇஇஇ - காண்டற்றொழிலை யுடையவளே, கலி, 103, 40 வரி, நச், உரை. |