இப்பதினோ ரீறுகளும் வினைக்கண் வரும்பொழுது
பால் விளங்கும் எனல்
 

10.
  

இருதிணை மருங்கின் ஐம்பால் அறிய
ஈற்றினின் றிசைக்கும் பதினோ ரெழுத்தும்
தோற்றந் தாமே வினையொடு வருமே.

 

என் - எனின்  மேல்,    பாலுணர்த்தும்   என்னப்பட்ட    எழுத்து
இனைத்   தென்பதூஉம்,    அவை    வீனைக்கண்ணின்   றுணர்த்தும்
என்பதூஉம்,  வினைக்கண்ணும்   ஈற்றினின்   றுணர்த்தும்  என்பதூஉம்
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) இரண்டு திணையிடத்தும் உளவாகிய  ஐந்து  பாலினையும்
அறியும்படி      மொழியது      ஈற்றுக்கண்ணே      நின்றுணர்த்தும்
மேற்சொல்லப்பட்ட   பதினொரு  வகை   யெழுத்தும்  ;   அவைதாம்
பாலுணர்த்துதற்குப்   புலப்படுமிடத்து    வினைச்சொல்லோடு    வந்து
புலப்படும், (எ - று.)

பதினோரெழுத்துமாவன     னஃகானொற்றும்,     ளஃகானொற்றும்,
ரஃகானொற்றும்,   பகரமும்,   மாரும்,   துவ்வும்,   றுவ்வும்,  டுவ்வும்,
அவ்வும்,  ஆவும், வவ்வும் என இவை.  இசைக்கும்  என்பது  செய்யும்
என்னும்   முற்றுச்   சொல்   பெயரெச்சமாக   உணர்த்தும்   என்னும்
பொருள்படும்.

மேற்கூறிய     திணையினையும், பாலினையும்  ஈண்டு  வரையறுத்து
“இரு   திணை   மருங்கின்   ஐம்பால்”   எனக்   கூறிய    காரணம்
என்னையெனில், உயர் திணைப் பொருள்  தேவரும்,  நரகரும்  எனவும்
உயர்திணைப்பாலுள்   பேடியும்    அலியுமென   விரிந்து  நின்றனவும்
பொருள்களுண்மையின் இவ் பொருட்பகுதி யெல்லாஞ்  சொற்பகுதி  பிற
இன்மையின்   ஐந்தாய்    அடங்கினவே    யெனினும்    அப்பொருட்
பாகுபாடுபற்றி  நூலகத்து வேறுதிணையும்  பாலுமாக  விளங்கவுங் கூடும்
கொல்லோ  என்று மாணாக்கன் ஐயுறுவானாயினும்  என்று  ‘இவையல்ல
தில்லை’   என  ‘விரித்துத்  தொகுத்தல்’   என்னும்   இலக்கணத்தான்
வரையறுத்து
. “இருதிணை யைம்பால்” என்றாராகக் கொள்க.

முதற் சூத்திரத்துட்  கூறப்பட்ட   சொல்லிலக்கணம்   எட்டினுள்ளும்
திணைபால்  என்பனவற்று   இலக்கணமே  இத்துணையுங்  கூறியது என
வுணர்க.

முன்னின்ற நான்கு   சூத்திரமுந்   திணையும்   பாலும்   சொல்லும்
பொருளும்  வரையறை   யிலக்கணமும்   கூறின  எனவும்,  பின்னின்ற
ஆறும்  அத்திணையும்  பாலும் உணர்த்துஞ்  சொற்களின்  இலக்கணங்
கூறின எனவும் உணர்க.                                    (10)

******************************************************************