என் - எனின் வழுக்காத்தலை நுதலிற்று, வழுக்காக்கு மிடத்து வழுவற்க என்று காத்தலும், வழுவமைக என்று காத்தலும் என இரண்டாம். அவற்றுள் இது வழுவற்க என்று காத்தல். (இ - ள்.) வினைச்சொல்லா னடங்கும் பாலறியப்பமும் பொருளும் பெயர்ச்சொல்லா னடங்கும் பாலறியப்படும் பொருளும் என இவ்விருவகைப் பொருளும் ஒன்றோடொன்றை மயங்கச் சொல்லுதல் பொருந்தா ; தத்தம் இலக்கணத்தானே சொல்லுதலுடைய, (எ - று.) (எ - டு) உண்டான் அவன், உண்டாள் அவள், உண்டார் அவர், உண்டது அது, உண்டண அவை என வரும் : இவை வினை. அவன் உண்டான், அவள் உண்டாள், அவர் உண்டார், அது உண்டது, அவை உண்டன என வரும் : இவை பெயர். பாலறி கிளவி யென்றதனை ஈண்டும் பொருள்மேற் கொள்க. அவ்வாறு பொருள் மேற் கொள்ளவே பொருள் பற்றி நிகழும் வழுவெல்லாம் படாமற் கூறுக என்பதாம். அவ்வழுக்களது பெயரும், முறையும், தொகையும் ஓரிடத்துங் கூறிற்றிலரே யாயினும் உரையிற் கோடல் என்பதனான் இச் சூத்திரத்து உரையுட் கொள்ளப்படும். அவையாவன : திணைவழூஉ, பால்வழூஉ, இடவழூஉ, காலவழூஉ, மரபுவழூஉ, செப்புவழூஉ, வினாவழூஉ என இவையாம். இவையெல்லாம் மரபுவழு என ஒன்றேயாகற்பால எனின் அவ்வாறு ஒன்றாயடங்குமே யெனினும் அம்மரபினைப் பகுத்துத் திணைபற்றிய மரபினைத் திணையென்றும், பால் பற்றிய மரபினைப் பாலென்றும், இடம் பற்றிய மரபினை இடமென்றும், காலம் பற்றிய மரபினைக் காலமென்றும் செப்பு பற்றிய மரபினைச் செப்பென்றும், வினாபற்றிய மரபினை வினா வென்றும் பகுத்து இவ்வாறு ஒன்றனையும் பற்றாது வருவதனை மரபென ஒன்றாக்கி இலக்கணமும் வழுவுங் கூறினாரென்பது. அவற்றுள் திணைவழூஉ : உயர்திணைப்பால் மூன்றும் அஃறிணைப்பால் இரண்டனோடு மயங்கி உயர்திணைவழூஉ மூவிரண்டாறாம் ; இனி அஃறிணைப்பாலிரண்டும் உயர்திணைப்பால் மூன்றனோடு மயங்கி அஃறிணைத்திணைவழூஉ இருமூன்று ஆறாம். இவை பெயர் வினையென்னும் இரண்டனோடு உறழ இருபத்து நான்காம். (எ - டு.) அவன் வந்தது, அவன் வந்தன என்றாற் போல்வன பெயர்பற்றிய உயர்திணைத் திணைவழூஉ. அது வந்தான், அது வந்தாள், அது வந்தார் என்றாற் போல்வன பெயர்பற்றிய அஃறிணைத் திணைவழூஉ. இனி வந்தான் அது, வந்தான் அவை என்றாற்போல்வன வினைபற்றிய அஃறிணைத் திணைவழூஉ. இனிப்பெயரொடு பெயர்பற்றிய திணைவழூஉ, வினையொடு வினை பற்றிய திணைவழூஉ என விகற்பிக்கப் பலவுமாம். (எ - டு.) அவன் அது, அவன் அவை என்றாற் போல்வன பெயரொடு பெயர்பற்றிய திணைவழூஉ உண்டான், தின்றான், ஓடினான் சாத்தன் என ஒருவன் மேற்பலவினை கூறுகின்றுழி உண்டான் தின்றான் ஓடினான் பாடினான் என்றாற்போல்வன வினையொடு வினைபற்றிய திணைவழூஉ. இனிப் பால்வழூஉ : உயர்திணைப்பால் மூன்றும்ஒன்று இரண்டனோடு மயங்கி மூவிரண்டாறாம். அஃறிணைப் பாலிரண்டும் ஒன்றனோடு ஒன்று மயங்கி ஓரிரண்டாயின. ஆகப் பால்வழூஉ எட்டுவகைப்படும். அவை வினை பெயர் என்னும் இரண்டனோடுறழப் பதினாறாம். (எ - டு.) அவன் உண்டாள், அவன் உண்டார் என்பன உயர்திணைப் பெயர்பற்றிய பால்வழூஉ. அது வந்தன, அவை வந்தது என்பன அஃறிணைப் பெயர் பற்றிய பால்வழூஉ. உண்டான் அவள், உண்டான் அவர் என்பன உயர்திணை வினைபற்றிய பால்வழூஉ. வந்தது அவை, வந்தன அது என்பன அஃறிணை வினைபற்றிய பால்வழூஉ. இனிப் பெயரோடு பெயரும் வினையொடு வினையும் பற்றிய வழுவாவனவும் உள. (எ - டு.) அவன் யாவள், அது யாவை என இவை பெயரொடு பெயர் பற்றிய பால்வழூஉ. உண்டான், தின்றாள், ஓடினான், பாடினாள், சாத்தன் எனவும், உண்டது, தின்றன, வந்தது, கிடந்தன ஓரெருது எனவும் இவை வினையொடு வினை பற்றிய பால்வழூஉ. இனி இடவழூஉ : தன்மை முன்னிலை படர்க்கையென்னும் மூன்றும் ஒன்று இரண்டனோடு மயங்கி மூவிரண்டாறாம். (எ - டு.) யான் உண்டாய், யான் உண்டான் என்பன, பெயர் வினைகளைப் பற்றி வரும் விகற்பம் இவற்றிற்கு மொக்குமென உணர்க. காலவழூஉ : இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்றும் ஒன்று இரண்டனோடு மயங்கி மூவிரண்டாறாம். (எ - டு.) செத்தானைச் சாகின்றான் எனவும், சாவான் எனவுங் கூறினாற்போல வருவன. இவையிற்றிற்கும் பெயர் வினைகளைப் பற்றி வரும் விகற்பங் கொள்க. மரபுவழூஉ : ஒரு பொருட்குரிய மரபினை ஒரு பொருட்கு உரித்தாகச் சொல்லுதலாம். (எ - டு.) யானை மேய்ப்பானை இடையனென்றும், ஆடு மேய்ப்பானைப் பாகனென்றும், யானையுட் பெண்ணை ஆ என்றும், ஆவினுட் பெண்ணைப் பிடி என்றும் கூறினாற் போல்வன. செப்பு வழுவிற்கும் வினாவழுவிற்கும் உதாரணம் மேல் வருகின்ற ‘செப்பும் வினாவும்’ என்னுஞ் சூத்திரத்தாற் கொள்ளப்படும். எழுவகை வழுவும் இச்சூத்திரத்துள் ‘மயங்கல்கூடா’ என்றதனாற் பெறுது மெனின், மேல் “செப்பு வினாவும் வழா அ லோம்பல்” எனச் செப்புவழுவும், வினாவழுவும் கூறலமையாதெனின், இதனுள் அடங்கின வற்றையே உலகத்துச் சொல்லெல்லாம் உயர்திணைச்சொல் அஃறிணைச் சொல் என வரையறையுற்றாற்வோல் வினாவுரையும் செப்புரையுமென இரண்டாக வரையறைப்படுத்து ஓர் நிலைமைகண்டு அதனை உணர்த்துதற் பொருட்டு மீட்டும் விளங்கக் கூறினாரென்று சொல்லுப. எழுவகை வழுவிற்கும் இஃதோர் பொதுவிதி கூறிய தெனவும், சிறப்பு விதி வேறு வேறு கூறிற்றெனவும் உரைக்கப்படும். செப்புவினா ஒழிந்தவற்றிற்குச் சிறப்புவிதி யாதோவெனின் வினையியலுட் கடைக்கண் காலவழுவிற்கு விதிபெறுதும். மரபு வழுவிற்கு விதி பொருளதிகாரத்து மரபியலென்னும் ஒத்திடைக் கண்டு கொள்ளப்பெறுதும். ஒழிந்த திணைபாலிடங்கட்குவிதி ‘னஃகா னொற்று’ முதலிய சூத்திரங்களாற் கூறிற்றென வுணர்க. இவ்வாறு நூனயமாதல் இச்சூத்திரத் துரையினுட் கண்டு கொள்க. இவ்வதிகாரத்துக் கூறப்படும் விதி மாணாக்கன் ஒரு பொருளினைக் கூறுந்திறன் அறியாது இடர்ப்படுதல் நோக்கி இன்ன பொருளை இன்னவாறு கூறுக என்று அதனிலக்கணம் கூறுதலும், அதனை அவ்வாறொழியவுங் கூறுதலும் ஆம் என்று கருதினும் கருதற்க என்று அதனை வழுவற்க என்று காத்தலும், அவ்வாறு வழுப்படப் கூறிய வழக்கினுட் சிலவற்றை அதனகத்து அவ்வாறு கூறுதற்கோர் பொருட் காரணங் கண்டாதல் அமைதி கூறுதலுமென மூவகை. அவற்றுள் இச்சூத்திரம் வழுவற்க என்னும் விதி கூறிற்றென வுணர்க. (11) |