என் - எனின், னகார வீற்றுள் விளி ஏற்பன எல்லாம் உணர்த்தி இனி விளிஏலாதன கூறுகின்றது. (இ - ள்.) தான் என்னும் ஆனீற்றுப் பெயரும் சுட்டெழுத்தை முதலாகவுடைய அன்னீற்றுப் பெயர்களும் யான், யாவன் என்ற அவ்வனைத்ததுப்பெயர்களும் மேற்கூறியவாற்றா னாயினும் பிறவாற்றா னாயினும் விளிகோடல் இல, (எ - று.) தான், யான் என்பன ஆனீறே எனினும் விளியேலா எனக்கொள்க. அவன், இவன், உவன் என்னும் சுட்டுப்பெயரும் யாவன் என்னும் வினாப் பெயரும் அன்னீறே எனினும் விளிஏலா என்றவாறு. மற்றுத் தான் என்பதன்றோ எனின், விரவுப் பெயர்களை உயர் திணைப் பெயர்களோடு மாட்டெறியும் வழி விலக்கற்பாடு மாட்டெறிதற் கொப்பன இன்மையின் ஈண்டே கூறினார் என்பது. (20) |