என் - எனின், இதுவும் விளியேலாதன கூறுதல் நுதலிற்று. (இ - ள்.) நும் என்னும் சொல்லினது திரிபாகிய நீயிர் என்னும் சொல்லும், வினாப்பொருளை உணர நின்ற சொல்லாகிய யாவர் என்னும் சொல்லும் என்று சொல்லப்பட்ட அம் முறையினையுடைய சொல் இரண்டும் மேல் விளியேலாது என்று சொல்லப்பட்ட சுட்டுப்பெயர் போலத் தாமும் விளியேலா, (எ - று.) நீயிர் என்பது இர் ஈறாகலின், ஈண்டு எய்திய தின்மையின் விலக்கல் வேண்டா எனின், ‘ஏனைப்புள்ளி’ (132) என்பதனுள் இர் ஈறுங் கொள்ளப்பட்டமையின் வேண்டும் என்பது. (26) |