என் - எனின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி யுணர்த்துதல் நுதலிற்று. மேல் ‘பெண்மை சுட்டிய’ (கிளவி - 4) என்றதனுள் பேடியை முப்பாலானுஞ் சொல்லுக என்னும் விதியுள் ஒரு கூற்றை விலக்கியதென வுணர்க. (இ - ள்.) உயர்திணை யிடத்துப் பெண்மையைக் கருத வேண்டி ஆண்மைத் தன்மை நீங்கிய பேடி யென்னும் பெயராற் சொல்லப்படும் பொருண்மை ஆண்மகனை யறியுஞ் சொல்லாற் சொல்லுதற்கு ஆமிடன் இல்லை என்றவாறு. எனவே பெண் பாலானும் பன்மைப்பாலானுஞ் சொல்லுக, (எ - று.) (எ - டு.)பேடி வந்தாள், பேடியர் வந்தார் என இவை. ‘இடன்’ என்ற மிகுதியால் பேடிவந்தான் என்பதும் சிறுபான்மை அமையுமென்பது. அவ்வாறமையுமென விலக்கிப் பெற்றது என்னையெனின், பெரும்பான்மை சிறுபான்மை யுணர்த்துதல் எனவுணர்க. இதனைப் ‘பெண்மை சுட்டிய’ என்றதன்பின் வையாது, இத்துணையும் போதந்து மேற்கூறப்படுகின்ற வழுவமைதிகளோடு சொல்லிவைத்த முறையன்றிக் கூற்றினால் பெண்ணும் ஆணும் அல்லதனை அவ்வப்பாற் சொல்லாற் சொல்லுதல் வழுவமைதி யென்பது பெறப்பட்டது. வழுவமைதிகள்தாம் இலக்கணம் உள்வழிக் கூறும் வழுவமைதியும், இலக்கணம் இல்வழிக் கூறும் வழுவமைதியும் என இருவகைப்படும். அவற்றுள் இஃது இலக்கணமில்வழிக் கூறிய வழுவமைதி என உணர்க. இது பால்பற்றிப் பிறந்ததோர் மரபு வழுவமைதி எனவுணர்க. (12) |