என் - எனின், உயர்திணைப்பெயரும் விரவுப்பெயரும் விளியேற்குமாறு உணர்த்தி, இனி அஃறிணைப் பெயர் விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) புள்ளி யெழுத்தினையும் உயிரெழுத்தினையும் ஈறாகவுடைய அஃறிணையிடத்து எல்லாப்பெயர்களும் விளிக்கு நிலைமை பெறுங்கால முண்டாயின் அவ்விடத்து ஏகாரம் வருதலைத் தெளியப்படுநிலையை யுடையன, (எ - று.) (எ - டு.) நரி - நரியே ; புலி - புலியே; அணில், அணிலே ; மரம் - மரமே எனவரும். “வருந்தினை வாழி நெஞ்சம்” எனவும் “காட்டுச் சாரோடுங் குறுமுயால்” எனவும் பிறவாறும் விளியேற்று வந்தனவால் எனின், அவ்வாறு வருவன வழக்கினகத்து இன்மையின் அவை செய்யுள் விகாரமெனக் கொள்க. “விளிநிலை பெறூஉங் காலந்தோன்றின்” என்றது அவை விளியேற்கு நிலைமை சிறுபான்மை யென்றது என உணர்க. தெளிநிலையுடைய என்றது அவ்வேகாரம் பற்றி .............................க் கூறியதாகக் கொள்க. (34) |