செப்பு வினா என்றவற்றுள் செப்புமறுத்தலும், உடன்படுதலுமென இரண்டு வகைப்படும். நுந் நாடியாது என்றாற்குப் பாண்டிநாடு என்றாற் போல்வன இவ்விரண்டனுள் அடங்காதெனினும் ஒருவகையான் அடக்கிக்கொள்ளப்படும். இனி வினா ஐந்துவகைப்படும் அறியான் வினாதல், அறிவொப்புக் காண்டல், ஐயமறுத்தல், அவனறிவு தான்கோடல், மெய் அவற்குக் காட்டல் என. ‘அறியான் வினாதல் அறிவொப்புக் காண்டல், ஐய மறுத்தல் அவனறிவு தான்கோடல், மெய்அவற்குக் காட்டலோடு ஐவகை வினாவே’ என்பதுங் கண்டுகொள்க. வழாஅல் ஓம்பலெனவே வழுவுதலும் உண்டென்பது பெறப்பட்டது. அவற்றுட் செப்புவழூஉ வினா வெதிர்வினாதலும், ஏவுதலும், உற்றது உரைத்தலும், உறுவது கூறலும், சொற்றொகுத்து இறுத்தலும், சொல்லாதிறுத்தலும், பிறிதொன்று கூறுதலும் என எழுவகைப்படும். உறுகின்றது கூறல் என்னும் ஒன்றுண்டேல் உற்றதுரைத்தலுள் அடங்கு மெனக் கொள்க. அவற்றுள் பிறிதொன்று கூறல் அமையாவழூஉ வெனப்படும். கருவூருக்கு வழி யாது எனப் பருநூல் பன்னிருதொடி என்றாற்போல்வன. மற்றைய ஆறும் அமையும் வழு எனப்படும். வினாவெதிர் வினாதல் ‘வினாவுஞ் செப்பே’ (கிளவி - 14) என்றவழிக் கொள்ளப்படும். ஏவலும், உற்றதுரைத்தலும் உறுவது கூறலும் என்ற மூன்றுஞ் ‘செப்பே, வழீஇயினும்’ (கிளவி - 15) என்புழிக் கொள்ளப்படும். சொற்றொகுத்திறுத்தல் ‘எப்பொருளாயினும்’ (கிளவி - 35) என்புழியும், ‘அப்பொருள்கூறின்’ (கிளவி - 36) என்புழியும் கொள்ளப்படும். சொல்லாதிறுத்தலாகிய ‘பெருமா ! 1 உலறினீரால்; என்றார்க்கு வாளாதே ‘உலறினேன்’ என்றாற் போல்வன, அதிகாரப் புறனடையாகிய ‘செய்யுள் மருங்கினும்’ (எச்ச - 61) என்புழிக் கொள்ளப்படும். வினாவழூஉ, தான் வினாவுகின்றதனைக் கேட்டான் இறுத்தற்கிடம் படாமல் வினாதல் என ஒன்றேயாம். (எ - டு.) ஒரு விரல்காட்டி இது நெடிதோ குறிதோ என்றாற் போலவன. வினாவிற்கமையாவழுவல்லது அமையும் வழூஉ வென்பதொன்றில்லை. இனி ‘வழாஅல்’ என்பது, வழுவியென்னுஞ் செய்தெனெச்சத்து எதிர்மறையாகிய வழாமல் என்னுஞ்சொல் குறைக்கும்வழிக் குறைத்தல் என்பதனால் இடைநின்ற மகரம் குறைந்து நின்றதென வுணர்க. |