இடைச்சொல்லும் உரிச்சொல்லும்
 

162.இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும்
அவற்றுவழி மருங்கின் தோன்றும் என்ப.
 

என் - எனின், இறந்ததுகாத்தலை நுதலிற்று.

(இ - ள்.)   இடைச்சொல்லாகிய   சொல்லும்   உரிச்  சொல்லாகிய
சொல்லும் பெயர்வினைகட்கு இடமாகிய இடத்தே  தோன்றும்;  தாமாகத்
தோன்றா, (எ - று.)

இடைச்சொல்  முற்கூறிய  காரணம்  என்னை எனின் எழுகூற்றதாகிய
வழக்குப் பயிற்சி நோக்கி என்க.

மருங்கு  என்றதனான்   அவ்விடை  யுரிகள்   பெயர்  வினைகளை
அடைந்து   தோன்றுங்கால்   தம்மருங்கினால் தோன்றுதலும் பெயரதும்
வினையதும்   மருங்கினால்   தோன்றுதலும்  என  இருவகை  என்பது
கொள்ளப்படும்.

அதுமன்,  உறுகால்   என்பன   தம்மருங்கிற்  றோன்றின.  அவன்,
அவள், உண்டான், உண்டாள் என்பது அவற்றமருங்கிற்றோன்றின.

இத்துணையுங் கூறியன  நான்கு  சொல்லிற்கும்  பொதுவிலக்கணம் ;
மேற்கூறுகின்றது பெயரதிலக்கணம் என உணர்க.                 (5)

******************************************************************